ரிஷப் பண்ட்டுக்கு முழங்கால், கணுக்காலில் அறுவை சிகிச்சையா? பிசிசிஐ கொடுத்த அப்டேட்!

ரிஷப் பண்ட்டுக்கு முழங்கால், கணுக்காலில் அறுவை சிகிச்சையா? பிசிசிஐ கொடுத்த அப்டேட்!
ரிஷப் பண்ட்டுக்கு முழங்கால், கணுக்காலில் அறுவை சிகிச்சையா? பிசிசிஐ கொடுத்த அப்டேட்!

விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், தசைநார் சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும் பேட்டருமான ரிஷப் பண்ட் டிசம்பர் 30, 2022-ல் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கி அருகே விபத்தில் சிக்கினார். அவர் ஓட்டிச் சென்ற கார், சாலையில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயங்களுடன் உயர் தப்பிய ரிஷப்பை, அவ்வழியாகச் சென்ற பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோர் காப்பாற்றி அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் டேராடூன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு நெற்றியில் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது.

இதுகுறித்து அம்மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ரிஷப் பண்ட் தற்போது நலமாக உள்ளார். அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவர், மேல் சிகிச்சைக்காக டெல்லி அல்லது மும்பைக்கு மாற்றுவது குறித்து முடிவு செய்யப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்திருந்தது. அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் தாம் செய்வதாக பிசிசிஐயும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ரிஷப் பண்ட் முழங்கால் மற்றும் கணுக்கால் தசைநார் சிகிச்சைக்காக மும்பைக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். டேராடூனில் இருந்து தனி விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட ரிஷப்புடன் மருத்துவக்குழுவினரும் சென்றுள்ளனர் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மும்பையில் அவருக்கு புகழ்பெற்ற எலும்பியல் மருத்துவரான டின்ஷா பர்திவாலாவின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. ஒருவேளை, முழங்கால் மற்றும் கணுக்கால் பகுதிகளில் அறுவைச்சிகிச்சை செய்யப்பட நேர்ந்தால், அதுகுறித்து அமெரிக்க மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தப்படும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com