ஒருவேளை தோனி அந்த முடிவை எடுத்தால்?.. கலக்கத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!

ஒருவேளை தோனி அந்த முடிவை எடுத்தால்?.. கலக்கத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!
ஒருவேளை தோனி அந்த முடிவை எடுத்தால்?.. கலக்கத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான மகேந்திர சிங் தோனியை, 20 ஓவர் போட்டியின் இயக்குநராக நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒருப்பக்கம் அவரது ரசிகர்களை மகிழ்வித்தாலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 16-வது சீசன் ஐபிஎல் தொடரே தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் தொடராக இருக்குமோ என்ற அச்சமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதற்கான வாய்ப்புகள் குறித்து பார்க்கலாம்.

போட்டி போட்ட உரிமையாளர்கள்.. 9.5 கோடிக்கு ஏலம் போன தோனி!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த மகேந்திர சிங் தோனி, இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர். ஏனெனில் விக்கெட் கீப்பராகவும், கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடுவதுடன், எந்த நேரத்தில் எந்த பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களை களமிறக்க வேண்டும் என்பதில் கவனமாக திட்டமிட்டு செயல்பட்டு, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வதில் வல்லவராக இருந்தார் தோனி. இதனால் தான், உள்ளூர் போட்டியான ஐபிஎல் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு இந்தியாவில் துவங்கப்பட்டபோது அவரை ஏலத்தில் எடுக்க எல்லா அணிகளும் போட்டி போட்டன.

குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை அணியும் போட்டிப்போட்ட நிலையில், கடைசியாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநரும், பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான என் ஸ்ரீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9.5 கோடிக்கு தோனியை ஏலத்தில் வாங்கியதுடன் அணியின் கேப்டனாகவும் நியமித்தது. அப்போது அந்த சீசனில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட ஒரே வீரர் தோனி தான். ஏனெனில், அதற்கு முன்னதாக 2007-ம் ஆண்டு ஐசிசியின் டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றிருந்தது தான் காரணம்.

4 கோப்பைகளை வென்ற தோனியின் சிஎஸ்கே!

தோனியை கலந்தாலோசித்து தான் சென்னை அணி நிர்வாகம் ஏலத்தில் வீரர்களை எடுப்பது முதல் அனைத்து முடிவுகளை எடுத்து வந்தது என்றே கூறலாம். மேலும் சூதாட்டப் பிரச்சனை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு ஆண்டுகள் தடைசெய்யப்பட்டன. இந்த இரண்டு ஆண்டுகளைத் தவிர சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தோனி, இதுவரை அவரது தலைமையில் 4 கோப்பைகளை வென்று, ஐபிஎல்லில் அதிக சாம்பியன் பட்டங்களை வென்ற அணியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

தோனியை வைத்து பிசிசிஐ புது திட்டம்

அதேநேரத்தில் இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்த தோனி, ஐசிசி டி20 உலகக் கோப்பைக்குப் பின்னர், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையையும், 2013-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றுக் கொடுத்தார். இந்திய அணியில் ஐசிசியின் 3 கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற பட்டத்தை தோனி மட்டுமே பெற்றுள்ளார். இதனால் தோனியின் திறமை மற்றும் அனுபவத்தை பயன்படுத்திக்கொள்ள பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

”சென்னையில்தான் ஓய்வு பெறுவேன்”

41 வயதான தோனி, நல்ல உடற் தகுதியுடன் இருந்தாலும் வயதின் காரணமாக சென்னை அணியில் அடுத்த ஆண்டுக்குப் பிறகு நீடிக்க வாய்ப்பில்லை. மேலும் அவர், சென்னை மண்ணில் தான் தனது கடைசி ஐபிஎல் போட்டி இருக்கும் என்றும், அத்துடன் ஓய்வை அறிவித்துவிடுவேன் என்றும் ஏற்கனவே பல பேட்டிகளில் கூறிவந்தார். சென்னை எப்போதும் தோனிக்கு ஸ்பெஷல். இதனால் தான் கடந்த 2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக தனது ஓய்வினை சமூகவலைத்தளத்தில் அறிவித்தாலும் சென்னைக்கு வந்தப்பிறகுதான் அந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஐபிஎல் போட்டியில் இருந்தும் ஓய்வை அறிவிக்கும் முன்னதாக சென்னை அணியை தயார்படுத்தவே ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக கடந்த சீசனில் தோனியின் பரிந்துரையின் பேரில் கடந்த சீசனில் சில போட்டிகளில் சென்னை அணி நியமித்தது. ஆனால் சில காரணங்களால் ஜடேஜா விலகிக் கொள்ள, மீண்டும் கேப்டனாக தோனி செயல்பட்டார். எனினும், வருகிற 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பின்னதாக தோனி விளையாடுவது சாத்தியமில்லை என்றே கூறப்பட்டு வருகிறது.

பிசிசிஐ நோக்கி தோனி.. கலக்கத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்

இதையெல்லாம் வைத்தும், தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டின் பணிச் சுமையை குறைக்கும் வகையிலும், ஐபிஎல்லில் இருந்து தோனி ஓய்வுபெற்றப் பிறகு 20 ஓவர் வடிவ கிரிக்கெட்டின் இயக்குநராக தோனியை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது என்றே தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பையில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவை தவிர மற்ற வீரர்கள் பெரிதாக பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை.

பவுலிங்கிலும் சீனியர் வீரர்களான அஷ்வின், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் என யாரும் பெரிதாக விக்கெட் எடுக்கவில்லை. தோனி ஒருவேளை டி20 இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்தால், விமர்சனங்களை தவிடுபொடியாக்கி வெற்றிபெறலாம் என்று கணக்கிட்டு இந்த முடிவை எடுத்து வருவதாக தெரிகிறது. இதனால் சென்னை அணியில் தோனி இல்லையென்றாலும், இந்திய அணியில் தோனி பதவி வகித்தால் அதிகளவிலான ஐசிசி கோப்பைகளை வெல்லலாம் என்றுக் கூறப்படுவதால் கலக்கத்தில் இருந்தாலும் ரசிகர்கள் சற்று நிம்மதியுடனே உள்ளனர்.

ஒருவேளை இதுதான் தோனிக்கு கடைசி சீசன் என்றால் கோப்பையுடன் அவரை வழியனுப்ப சிஎஸ்கே வீரர்கள் அதிக முனைப்புடன் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com