இந்திய அணி தோல்வியடைய இதுதான் காரணம்? - ஓர் அலசல்

இந்திய அணி தோல்வியடைய இதுதான் காரணம்? - ஓர் அலசல்
இந்திய அணி தோல்வியடைய இதுதான் காரணம்? - ஓர் அலசல்

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இன்று ஆரம்பமான இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது இந்திய அணி. 

இந்த தோல்விக்கான காரணம் என்ன?

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. வார்னரும், ஃபின்சும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். 

பவர் பிளேயில் விக்கெட்டை வீழ்த்தாதது...

முதல் பத்து ஓவரை ஷமி, பும்ரா மற்றும் சைனி வீசியிருந்தனர். மூவரும் சேர்ந்து ஆஸ்திரேலிய அணியை 51 ரன்களில் கட்டுப்படுத்தி இருந்தனர். 

அதற்கடுத்த பத்து ஓவரும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. இருப்பினும் விக்கெட்டை கொடுக்காமல் இன்னிங்க்ஸை மெதுவாக பில்ட் செய்தனர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள். எந்த இடத்திலும் தவறு செய்யாத அவர்கள் இந்திய பவுலர்களின் தவறுகளை சரியாக டார்கெட் செய்தனர். அதன் விளைவாக 28 ஓவர்கள் வரை விக்கெட்டை இழக்காமல் இருந்தனர் வார்னரும், ஃபின்சும். 

கோலியும் தனது பவுலிங் கூட்டணியை சுழற்சி முறையில் மாற்றியும் அதில் தோல்வியை கண்டார். இறுதியில் ஷமியின் பந்து வீச்சில் விக்கெட்டை இழந்தார் வார்னர். 

மரண காட்டு காட்டிய ஸ்மித்

சர்வதேச கிரிக்கெட்டின் டாப் கிளாஸ் பேட்ஸ்மேனான ஸ்மித் இந்த ஆட்டத்தில் டாப் கிளாஸ் இன்னிங்க்ஸை விளையாடினார். 28 பந்துகளில் 30 ரன்களை எடுத்திருந்த ஸ்மித் அடுத்த 34 பந்துகளில் சதம் விளாசினார். சஹால், ஜடேஜா, சைனி, ஷமி, பும்ரா என அனைவரையும் ‘இன்னைக்கு நான் அடிக்கிற மனநிலையில இருக்குறேன்’ என சொல்வதை போல பொளந்து கட்டினார். 

ஃபின்ச் & மேக்ஸ்வெல்

ஸ்மித் ஒருபக்கம் அடித்து ஆட கேப்டன் ஆரோன் ஃபின்ச் கேப்டன்சி நாக் ஆடினார். 124 பந்துகளில் 114 ரன்களை அடித்து ஸ்மித்துக்கு நல்ல கம்பெனி கொடுத்தார். தொடர்ந்து களம் இறங்கிய மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 45 ரன்களை விளாசினார். ஐபிஎல் தொடரில் ஃபார்ம் அவுட்டாகியிருந்த அவர் இந்த ஒரு போட்டியில் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். 

சொதப்பிய பவுலர்கள் 

ஷார்ட்டர் பார்மட் கிரிக்கெட்டின் சூப்பர் பவுலரான பும்ரா இருந்தும் பவுலிங் யூனிட் மொத்தமாக கோட்டை விட்டது தோல்விக்கு முக்கிய காரணம். ஐந்து பவுலர்கள் முழுவதுமாக தலா பத்து ஓவர் வீசியும் ஒரே ஒரு மெய்டன் ஓவரை யாருமே வீசவில்லை. ஷமி மட்டும் பந்துவீச்சில் ஆறுதல் கொடுத்தார். மற்ற அனைவரும் வாரி வள்ளலாக ரன்களை வாரி கொடுத்தனர். எக்ஸ்டரா பவுலிங் ஆப்ஷனாக பாண்ட்யா இருந்தும் அவரை ஏனோ கோலி பயன்படுத்த வில்லை. 

அதன் மூலம் கடைசி பத்து ஓவரில் 110 ரன்களை ஸ்கோர் செய்தது ஆஸ்திரேலியா. தென்னாபிரிக்கா மற்றும் இலங்கைக்கு அடுத்த படியாக இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்களை குவித்த அணியாக ஆஸ்திரேலியா இந்த போட்டியின் மூலம் இணைந்துள்ளது.  375 ரன்கள் என்ற இமாலய இல்லை ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு நிர்ணயித்தது.

பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க தவறிய ஓப்பனர்கள்

இந்திய அணிக்காக மயங்க் அகர்வால் மற்றும் தவன் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் 53 ரன்களுக்கு பார்ட்னாஷிப் அமைத்திருந்தனர். மயங்க் 22 பந்துகளில் அவுட்டானார். ஆஸ்திரேலியா பெரிய டார்கெட்டை செட் செய்ய காரணமே வார்னரும்,  ஃபின்சும் கொடுத்த ஸ்லோ அண்ட் ஸ்டெடி ஸ்டார்ட் தான். அதை இந்திய ஓப்பனரான மயங்க் மறந்துவிட்டார். 

25 பந்துகளில் 3 விக்கெட்

ஆஸ்திரேலியா முதல் 28 ஓவர்கள் வரை விக்கெட்டை இழக்காமல் இருந்தது. அதே நேரத்தில் இந்தியா முதல் 13.3 ஓவர்களுக்கு நான்கு விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதிலும் பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய கோலி, ஷ்ரேயஸ் மற்றும் கே.எல்.ராகுல் என மூவரும் 25 பந்துகளில் தங்களது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்டது. 

தவன் மற்றும் பாண்ட்யா போராட்டம் வீண்

ஆல் ரவுண்டர் பாண்ட்யாவும், தொடக்க வீரர் தவனும் மொத்த பொறுப்பையும் தங்கள் மீது சுமந்து கொண்டு ரெஸ்பான்சிபிள் இன்னிங்ஸ் விளையாடினர். 128 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர் இருவரும். அதில் பாண்ட்யா அடித்து விளையாட, தவன் அடக்கி வாசித்தார். இருப்பினும் வெற்றி கோட்டை அவர்கள் கடப்பதற்குள் விக்கெட்டை இழந்தனர். 

பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் இந்தியா சொதப்பியதால் ஆஸ்திரேலியா சுலபமாக இந்த போட்டியில் வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் இந்தியா கம்பேக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com