”நான் இன்னும் ஒரு கப் கூட அடிக்கல”-தொடர் தோல்வி! ஆர்சிபி வீராங்கனைகளுக்கு கோலியின் அட்வைஸ்

”நான் இன்னும் ஒரு கப் கூட அடிக்கல”-தொடர் தோல்வி! ஆர்சிபி வீராங்கனைகளுக்கு கோலியின் அட்வைஸ்
”நான் இன்னும் ஒரு கப் கூட அடிக்கல”-தொடர் தோல்வி! ஆர்சிபி வீராங்கனைகளுக்கு கோலியின் அட்வைஸ்

முதல் முறையாக தொடங்கிய ஐபிஎல்லில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மகளிர் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், அவர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஊக்கமளித்துள்ளார்.

இந்த ஆண்டு முதல் தொடங்கியுள்ள மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 4ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில், மும்பை மற்றும் டெல்லி அணிகள் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளன. இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தலைமையில் பங்கேற்றிருக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 5 போட்டிகளில் விளையாடி 5 போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது.

இந்த அணியில் நட்சத்திர ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், சோபி டிவைன், எலிஸ் பெர்ரி, ஹீதர் நைட் உள்ளிடோர் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாமல் பெங்களூரு அணி திணறி வருவது அதன் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த தொடரில் இருந்து பெங்களூரு அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில்தான் இந்தியாவின் தற்போதைய ரன் மெஷினும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி, ராயல் சேலஞ்சர்ஸ் மகளிர் அணியை நேற்று சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தினார். நேற்று உ.பி. வாரியஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த போட்டிக்கு முன்பு விராட் கோலி பேசியிருந்தார்.

இதுகுறித்து அவர், ”கடந்த 15 வருடங்களாக ஐபிஎல் போட்டியை விளையாடி வருகிறேன். இன்னும் ஐபிஎல் கோப்பையை நான் வெல்லவில்லை. ஆனாலும் ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் போட்டிக்காக ஆர்வமாக இருப்பதை அது தடுத்துவிடாது. ஐபிஎல் போட்டியை வென்றால்தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என நினைக்க மாட்டேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் தீவிரமாக விளையாடுவதால்தான் உலகின் மிகச்சிறந்த ரசிகர்கள் எங்களுக்கு உள்ளார்கள்.

ஒவ்வொரு வருடமும் கோப்பையை வெல்வோம் என்கிற உத்தரவாதத்தை நாம் ரசிகர்களுக்குத் தர முடியாது. ஆனால் 110 சதவீதம் உழைப்பைச் செலுத்துவோம் என்கிற உத்தரவாதத்தைத் தர முடியும். இதுதான் உண்மையான சோதனை. ஆனால் இதுதான், தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள உதவும் பாடம். ஆகையால், எப்போதும் முகத்தை உற்சாகத்துடன் வைத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

நேற்று நடைபெற்ற போட்டியில், உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த உ.பி. அணி, 19.3 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய பெங்களூரு அணி, 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து இப்போட்டியில் முதல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் தலைமையில் டெல்லி கேப்பிடல்ஸ், மற்றொரு ஆஸ்திரேலிய வீராங்கனையான பெத் மூனி தலைமையில் குஜராத் ஜெயிண்ட்ஸ், இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ், இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீராங்கனையான அலிசா ஹீலி தலைமையில் உத்தரபிரதேச வாரியர்ஸ் என 5 அணிகள் இந்த தொடரில் களமிறங்கி விளையாடி வருகின்றன.

அதன்படி, மும்பை 5 ஆட்டங்களிலும் வெற்றிபெற்று முதல் இடத்திலும், டெல்லி அணி 4 ஆட்டங்களில் வெற்றிபெற்று 2வது இடத்திலும், உபி வாரியர்ஸ் 3 போட்டிகளில் வெற்றிபெற்று 3வது இடத்திலும் பெங்களூரு மற்றும் குஜராத் ஆகிய அணிகள் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று கடைசி இரு (4மற்றும் 5) இடங்களில் உள்ளன.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com