
ஐபிஎல் ஏலம் தொடங்குவதற்கு முன்பே, விக்கெட் கீப்பர் குயின்டோன் டி காக்கை பெங்களூரு அணி, மும்பைக்கு விற்றுள்ளது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் குயின்டோன் டி காக். இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ் சர்ஸ் அணிக்காக விளையாடினார். இதற்காக, கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் அவரை ரூ.2.8 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியிருந்தது.
பெங்களூரு அணிக்காக 8 போட்டிகளில் விளையாடிய டி காக், 201 ரன்கள் எடுத்திருந்தார். அவரது ஐபில் சராசரி 124.07. இந்நிலையில், ஏலத்தில் வாங்கிய அதே தொகைக்கு அவரை மும்பைக்கு அணிக்கு விற்றுள்ளது பெங்களூரு.
மும்பை அணியில் ஏற்கனவே இஷான் கிஷான், ஆதித்யா தாரே ஆகிய விக்கெட் கீப்பர் உள்ள நிலையில் மூன்றாவதாக டி காக் சேர்ந்துள்ளார். இவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க மும்பை முடிவு செய்துள்ளது.
கடந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் லெவிஸ், மும்பையின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி, தடுமாறினார். இதனால் டி காக் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் எனத் தெரிகிறது.
டி காக், மும்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளதால், அந்த அணியில் இருக்கும் பங்களாதேஷ் வேகப்பந்துவீச்சாளர் முஸ்தாபிஷூர் ரஹ்மான் (ரூ.2.2 கோடி), இலங்கை சுழல் பந்துவீச்சாளர் அகிலா தனஞ்செயா (ரூ.50 லட்சம்) விடுவிக்கப்படுகிறார்கள்.
டி காக் ஏற்கனவே, ஐதராபாத், டெல்லி அணியிலும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தாண்டுக்கான ஐபிஎல் ஏலம் டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி கோவாவில் நடக்கும் எனத் தெரிகிறது.