ஐபிஎல்-க்காக துபாயில் தயாராகும் விராட் கோலி !
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி ஹோட்டலில் இருந்தபடியே உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
13 ஆவது ஐபிஎல் டி20 தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக 8 அணி வீரர்களும் துபாய் சென்றுவிட்டனர். கொரோனா விதிகளின்படி, அனைத்து வீரர்களும் அதிகாரிகளும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பார்கள். இந்தக் காலக் கட்டத்தில் அவர்கள் அடுத்தடுத்த கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
அனைத்து வீரர்களுக்கும் கொரோனா நெகட்டிவ் என்ற சோதனை முடிவை பெற்றபின் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, விளையாட அனுமதிக்கப்படுவார்கள். கடந்த சில நாள்களுக்கு முன்பு துயாய் சென்ற ஆர்சிபி வீரர்களில் கோலி இடம்பெறவில்லை. ஆனால் '’ஹலோ துபாய்’’ என விராட் கோலி ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து ஆர்சிபி செய்தித் தொடர்பாளர் கூறுகையில் "மும்பையிலேயே கோலி கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அதனால் அவர் பெங்களூரு வரவில்லை. அவர் மும்பையிலிருந்து தனி விமானம் மூலம் துயாப் சென்றார்" என கூறியுள்ளார். இப்போது துபாய் சென்றுள்ள கோலி தன்னை 7 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் ஹோட்டலில் இருந்தபடியே கோலி உடற்பயிற்சி மேற்கொண்டு வருவதாக ஆர்சிபி நிர்வாகம் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளது.