'ராயுடு ரொம்பவே புத்திசாலி' விராட் கோலி புகழாரம் !

'ராயுடு ரொம்பவே புத்திசாலி' விராட் கோலி புகழாரம் !

'ராயுடு ரொம்பவே புத்திசாலி' விராட் கோலி புகழாரம் !
Published on

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் போட்டிகள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி சமனில் முடிந்தது. மூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் இன்று 4வது ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 137 பந்துகளில் அவர் 162 ரன்கள் எடுத்தார். இவரது ஆட்டம் அணியின் ஸ்கோர் உயர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்தது. இதற்கிடையே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடு 81 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இதையடுத்து 378 எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை எதிர்த்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் கலீல் அகமதின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தோல்வியடைந்தது. போட்டியின் ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த வெற்றிக்கு பின் பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி " ராயுடு தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். ராயுடுவுக்கு 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை அணி துணை நிற்கும். இந்திய ஒருநாள் அணிக்கு நான்காவது வீரர் சரியாக அமையவில்லை. ஆனால், இப்போது ஒரு புத்திசாலி அந்த இடத்தை நிரப்பியிருப்பது மகிழ்ச்சி. அதேபோல பவுலிங்கில் நாங்கள் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதனால்தான் கலீல் அகமதுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அதனால்தான் இன்றையப் போட்டியில் கலீல் சிறப்பாக பந்துவீசினார்" என்றார் கோலி.

இந்தத் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் " எங்கள் அணி வீரர்கள் முழு பலத்துடன் விளையாடவில்லை. இதுதான் எங்கள் தோல்விக்கு காரணம். அதேபோல தேவையில்லாத ரன் அவுட்டுகளும் எங்களது பேட்டிங்கை சீர்குலைத்துவிட்டது. இதுபோன்ற தவறுகள் அடுத்து வரும் போட்டியில் தவிர்க்கப்படும். மேலும், அடுத்தப் போட்டி முக்கியமானது என்பதால் ஆடும் லெவனில் மாற்றமும் செய்யப்படும்" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com