கபில்தேவ்வின் 35 வருட சாதனையை முறியடித்தார் ஜடேஜா! - என்ன தெரியுமா?

கபில்தேவ்வின் 35 வருட சாதனையை முறியடித்தார் ஜடேஜா! - என்ன தெரியுமா?
கபில்தேவ்வின் 35 வருட சாதனையை முறியடித்தார் ஜடேஜா! - என்ன தெரியுமா?

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முன்னாள் கேப்டன் கபில் தேவ்வின் 35 வருட சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக மொகாலியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் எட்டு விக்கெட் இழப்பிற்கு, 574 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 175 ரன்கள் குவித்தார். முதல் நாள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, இரண்டாவது நாளில் சீரான வேகத்தில் ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடி ரவீந்திர ஜடேஜா சர்வதேசப் போட்டியில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார்.

மறுமுனையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக விளையாட வந்த ஜெயந்த் யாதவ், 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் முகமது ஷமியுடன் இணைந்து ஜடேஜா, அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். ஸ்கோர் 574 ஆக இருந்த போது ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார். ரவீந்திர ஜடேஜா 175 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் 175 ரன்கள் குவித்த ரவீந்திர ஜடேஜா, முன்னாள் கேப்டன் கபில் தேவ்வின் 35 ஆண்டுகளாக சாதனையை முறியடித்துள்ளார். அதாவது, 7-வது வீரராக அல்லது அதற்கு கீழ் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனை 35 வருடங்களாக கபில் தேவ் வசம் இருந்து வந்தது. 1986-ம் ஆண்டு கான்பூரில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரானப் போட்டியில், 7-வது வீரராக களமிறங்கி கபில் தேவ் 163 ரன்கள் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.

தற்போது 175 ரன்கள் குவித்து ஜடேஜா அதனை கடந்துள்ளார். அதேபோல், கபில் தேவ், ரிஷப் பந்த் வரிசையில் 7-வது வீரராக களமிறங்கி 150 ரன்களுக்கு மேல் குவித்த மூன்றாவது வீரர் ஜடேஜா ஆவார். 2011-ம் ஆண்டு தென்னாப்ரிக்காவுக்கு எதிரானப் போட்டியில் தோனி 7-வது வீரராக களமிறங்கி 144 ரன்கள் எடுத்திருந்தார்.

இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இலங்கை அணி 2-ம் நாள் ஆட்டமுடிவில், 10 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்துள்ளது. கேப்டன் திமுத் கருணரத்னே 28, லிஹுரு திரிமன்னே 17, அஞ்சலோ மேத்யூஸ் 22, டி சில்வா 1 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா, பும்ரா தலா ஒரு விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.  நாளை காலை 9.30 மணியளவில் 3-ம் நாள் ஆட்டத்தில், இலங்கை அணி, இந்திய அணியின் இலக்கை எட்டுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com