சுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்!

சுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்!
சுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்!

இந்திய கிரிக்கெட் அணியின் டாப் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர், நம்மூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். இவர், தனது 33ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்நிலையில் அவர் கடந்த வந்த பாதையை சற்று திரும்பி பார்ப்போம். 

சிறு வயது முதல் கிரிக்கெட்டில் மிகுந்த ஈடுபாடும் ஆர்வமும் கொண்டிருந்த அஸ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைத்தது.  அதில் சிறப்பாகவும் விளையாடி வந்தார். தொடக்கத்தில் பேட்ஸ்மேனாக களமிறங்கி ஆடினார். பின்னர் தனது பள்ளிப் படிப்பை முடித்ததும் சென்னை எஸ்.எஸ்.என் கல்லூரியில் தகவல் தொழிநுட்ப பிரிவில் பொறியியல் படித்தார். அப்போது இவரது பயிற்சியாளர், ஓர் அறிவுரை வழங்கினார். அதாவது, அஸ்வின் உயரமாக இருப்பதால்,  அவர் சுழற்பந்து பயிற்சி பெற்றால் நன்றாக எடுபடும் என்றார். உயரமான சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக பவுன்ஸ் கிடைக்கும் என்பதால், எதிரில் ஆடும் பேட்ஸ்மேன்களுக்கு சிரமம் ஏற்படும். அது விக்கெட் வீழ்த்த உதவும் என்பது அவரது அட்வைஸ்.

இது சரியாக வொர்க் அவுட் ஆகும் என நினைத்த அஸ்வின், பேட்டை தூர வைத்துவிட்டு பந்தைத் தூக்க ஆரம்பித்தார். சுழற்பந்தை பழகினார். அசாத்திய மூளையும் சிறப்பான சிந்தனையும் அவரை சூப்பர் சுழல் மன்னனாக மாற்றியது. டி-20 மற்றும் 50 ஓவர் போட்டிகளில் ’யாருப்பா இது?’ என்று ஆச்சரியமாகக் கேட்க வைத்தது.

2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு அணி 50 ஓவர் தொடரை வெல்ல அஸ்வின் முக்கிய காரணமாக இருந்தார். தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய அஸ்வின் சிறப்பாக பந்துவீசினார். இதன் காரணமாக ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. 2010ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். இந்தப் போட்டியில் பேட்டிங்கில் 38 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அஸ்வின் இரண்டு போட்டிகளில் மட்டுமே களமிறங்கினார். அதே ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் முறையாக களமிறங்கினார். 


இந்தப் போட்டியில் ஹர்பஜன் சிங் களமிறங்காததால் அந்த வாய்ப்பு அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டும் வீழ்த்தி ஆச்சரியப்பட வைத்தார் அஸ்வின். இதன் மூலம் அறிமுகப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். இவருக்கு முன்பு இந்திய அணியின் நரேந்திர ஹிர்வானி தனது முதல் டெஸ்ட் போட்டியில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். 

முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளாராக அஸ்வின் உருவெடுக்க ஆரம்பித்தார். இவர் களமிறங்கிய முதல் 16 டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் 9 முறை எடுத்தார்.  தனது 18ஆவது போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். அதாவது அதி விரைவாக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு பிரசன்னா தனது 20 டெஸ்ட் போட்டிகளில் 100விக்கெட்டை வீழ்த்தியிருந்தது சாதனையாக இருந்தது. இதனை அஸ்வின் முறியடித்தார். 

தொடர்ந்து இந்திய துணை கண்டம் என்று அழைக்கப்படும் Indian subcontinent ஆடுகளங்களில் சமாளிக்க முடியாத பந்துவீச்சாளராக அஸ்வின் உருவெடுத்தார். இதற்கு காரணம் அவர் பந்துவீச்சில் செய்யும் மாற்றங்கள்தான். அவர் தனது 'கேரம் பால்'  பந்தை சிறப்பாக வீச ஆரம்பித்தார். அத்துடன் தனது பந்துவீச்சு முறையிலும்  போட்டியின் போது சில மாற்றங்களையும் செய்வார். குறிப்பாக பந்துவீசும் போது சில நொடிகள் நிதானித்து வீசும் முறை அனைவரையும் கவர்ந்தது. அத்துடன் பேட்ஸ்மேன் என்ன செய்யப் போகிறார் என்பதையும் சில நேரங்களில் முன்பே அறிந்து பந்து வீசும் திறமையும் அஸ்வினுக்கு உண்டு. 

ஆஃப் ஸ்பின்னரான அவர் நாளடைவில் பந்து வீச்சு முறையில் எந்த மாற்றமும் செய்யாமல் லெக் ஸ்பின் பந்தை வீசவும் தொடங்கினார். அவரது கேரம் பந்து மிகவும் பிரபலம் என்பதால் அவரது மனைவி தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததை “டிசம்பர் 21ஆம் தேதி நான் இரண்டாவது கேரம் பேபியை பெற்றெடுத்தேன்” எனக் கூறியிருந்தார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 

எனினும் இவரது டெஸ்ட் பயணத்தில் மிகவும் பின்னடைவாக பார்க்கப்பட்டது வெளிநாட்டு ஆடுகளங்களில் இவரது செயல்பாடு. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் அஸ்வினின் செயல்பாடுகள் சரியாக இல்லாததே இந்த விமர்சனம் எழ முக்கிய காரணமாக அமைந்தது. ஆனாலும் இந்திய துணைகண்டங்களில் நடைபெறும் போட்டிகளில் அஸ்வின் அசைக்க முடியாத பந்துவீச்சாளராக இருந்து வந்தார். 

தனது 54ஆவது டெஸ்ட் போட்டியில் 300ஆவது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி அஸ்வின் சாதனைப் படைத்தார். அதாவது அதிவிரைவாக 300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். இதற்கு முன்பு டென்னிஸ் லில்லி 56 போட்டிகளில் 300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது சாதனையாக இருந்தது இதனை அஸ்வின் தகர்த்தார். 

கடைசியாக அஸ்வின் இந்திய அணிக்காக, 2018ஆம் ஆண்டு அஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். அதேபோல ஒரு நாள் போட்டியில், 2017ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக களமிறங்கினார். இதற்கு பின் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர் இந்திய அணிக்காக இதுவரை 342 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அத்துடன் ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்களை எடுத்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நான்கு சதங்களையும் அடித்துள்ளார்.

எனினும் கடைசியாக நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஒரு போட்டியில் கூட அவர் களமிறக்கப்படவில்லை. இதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மற்றும் அனில் கும்ப்ளே உள்ளிட்ட வீரர்கள் தங்களின் அதிர்ச்சியை பதிவு செய்தனர். இது தொடர்பாக அனில் கும்ப்ளே, “இந்திய அணியில் இப்போதும் நம்பர் 1 சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தான். அஸ்வினை அணியில் சேர்ப்பதன் மூலம் அணியின் பந்து வீச்சு மட்டுமில்லாமல் பேட்டிங் பலமாகும்.

ஏனென்றால் அஸ்வின் ஒரு நல்ல பேட்ஸ்மேன். இதனால் இந்திய அணியின் பின்கள வரிசை சற்று பலமாகும். ஆகவே விரைவில் அஸ்வினை டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார். எனவே அஸ்வின் விரைவில் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com