அஸ்வின்தான் 800 விக்கெட்டுகளை எட்ட அதிக வாய்ப்பு: முத்தையா முரளிதரன் கணிப்பு

அஸ்வின்தான் 800 விக்கெட்டுகளை எட்ட அதிக வாய்ப்பு: முத்தையா முரளிதரன் கணிப்பு
அஸ்வின்தான் 800 விக்கெட்டுகளை எட்ட அதிக வாய்ப்பு: முத்தையா முரளிதரன் கணிப்பு

இதுவரை, அஸ்வின் 74 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 377  விக்கெட்டுகளையும், லியோன் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 396 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட்டுகளை எடுத்த ஒரே கிரிக்கெட் வீரர், இலங்கையின் முத்தையா முரளிதரன்தான். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தற்போது, ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக முரளிதரன் உள்ளார். முரளிதரன் எடுத்த 800 விக்கெட்டுகள் என்ற இலக்கை தற்போது இந்திய அணியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினும், ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த நாதன் லியோனும் சற்றே நெருங்கி வருகின்றனர்.

2010-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய அஸ்வின், 2011-ல் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் அறிமுகமாகினார். இதுவரை 74 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 377 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியுள்ளார். அதேபோல் 2011-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய ஆஸ்திரேலியா வீரர் நாதன் லியோன், இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 396 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

இந்திய அளவில் சுழற்பந்து வீச்சில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் அஸ்வின்தான். அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் 417 விக்கெட்டுகளையும், அஸ்வின் 377 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இந்தியப் பந்துவீச்சாளர்கள் அளவில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியதில் 4-வது இடத்தில் அதாவது கபில்தேவ், கும்ப்ளே, ஹர்பஜனுக்கு அடுத்தார்போல் அஸ்வின் உள்ளார்.

இந்நிலையில், தான் எடுத்த 800 விக்கெட்டுகள் என்ற இலக்கை ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நாதன் லியோன் இருவரில் யார் தொடுவார்கள் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு முத்தையா முரளிதரன் பதிலளித்துள்ளார். ''இப்போதிருக்கும் இளம் வீரர்களில் யாரும் 800 விக்கெட்டுகளை எட்டுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என நினைக்கிறேன். எனினும் இந்திய வீரர் அஸ்வின் 800 விக்கெட்டுகளை முதலாவதாக எட்டுவார் என நம்புகிறேன்.  நாதன் லியோனுக்கு அந்த வாய்ப்பு குறைவு. ஏனெனில் அவருக்கு 396 விக்கெட்டுக்களை எடுப்பதற்கு அதிகமான மேட்ச் தேவைப்பட்டிருக்கிறது’’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com