கங்குலி, டிராவிட் இருக்கும் போது இந்திய அணிக்கு வேறென்ன வேண்டும் - ரவிசாஸ்திரி
பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இயல்பாகவே நல்ல தலைமை பண்பு உடையவர் என்று தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயின் தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கடந்த புதன்கிழமை பொறுப்பேற்றார். இவர் பிசிசிஐயின் 39-ஆவது தலைவராவர். அத்துடன் பிசிசிஐ தலைமை பொறுப்பை ஏற்கும் இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். இவர் பதவியேற்ற பிறகு, “ இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை நீக்க தேவையில்லை. ஏனென்றால் அவரது பதவிகாலத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக பதவியேற்றது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். இவர் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்று இருக்கும் சவுரவ் கங்குலிக்கு எனது மனமாரந்த வாழ்த்துக்கள். அவருடைய பதவியேற்பு இந்திய கிரிக்கெட்டை சரியான பாதையில் நிறுத்தும்.
ஏனென்றால் சவுரவ் கங்குலி இயல்பாகவே நல்ல தலைமை பண்பு உடையவர். அத்துடன் அவரை போல் நான்கு ஆண்டுகாலம் கிரிக்கெட் நிர்வாக பதவியில் அனுபவம் வாய்ந்தவர்கள் தலைவராக வந்தால் இந்திய கிரிக்கெட்டிற்கு அது நல்லதாகும். தேசிய கிரிக்கெட் அகாடமி பிசிசிஐயின் முக்கிய அங்கம். அதில் திராவிட் உள்ளார். தற்போது பிசிசிஐ தலைவராக கங்குலி உள்ளார். இதைவிட இந்திய கிரிக்கெட்டிற்கு வேறு என்ன வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.