கடைசி ஓவர்களில் தோனி விளையாடினால் தூள்தான்: ரவிசாஸ்திரி!
2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தோனி விளையாடுவார் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உறுதி செய்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய கீப்பருமான தோனிக்கு, தனி ரசிகர் பட்டாளம் உண்டு. கிரிக்கெட்டில் தல என்று அழைக்கப்படும் இவர், 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் அனைவரது மத்தியிலும் இருந்தது. இந்நிலையில் அதனை இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உறுதி செய்துள்ளார்.
தோனி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரவிசாஸ்திரி, “தோனியின் அனுபவத்திற்கு மாற்றே கிடையாது. அவரைப் போல் திறமை உடையவர்களை நாம் வாங்கவும் முடியாது, எந்தச் சந்தையிலும் விற்பனையும் ஆகாது. உலகில் உள்ள தலைசிறந்த ஒருநாள் போட்டி வீரர்களில் தோனியும் ஒருவர். அவரிடம் அனுபவம் இல்லையா? அல்லது உடற்தகுதி இல்லையா? எது இல்லை அவரிடம். கிரிக்கெட் வரலாற்றில் ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் தோனியை போன்று சிறப்பாக விளையாடக்கூடியவர்கள் யாரும் இல்லை. அவர் 5, 6 அல்லது 7வது இடத்தில் களமிறங்கினால், அந்தப் போட்டியில் மிகப்பெரிய மாற்றத்தை நாம் காணமுடியும்” என்றார்.