ஆப்கன் டி20 கிரிக்கெட் கேப்டனாக ரஷீத் கான் நியமனம்
ஆப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக சுழல்பந்து வீச்சாளர் ரஷீத் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், ரஷீத் கானை கேப்டனாக நியமிப்பதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இடதுகை பேட்ஸ்மேன் நஜிபுல்லா ஸேட்ரான் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார் ரஷீத் கான்.
22 வயதாகும் ரஷீத் கான் இதுவரை 51 டி20 போட்டிகளில் விளையாடி 95 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் 74 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 140 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருக்கிறார். அதேபோல 5 டெஸ்ட்களில் விளையாடி 34 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் இறுதிக் கட்டங்களில் அதிரடியாக பேட்டிங் செய்யும் திறன் படைத்தவர் ரஷீத் கான். இந்தியாவுக்கு எதிராக 2018 இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் ரஷீத் கான் என்பது குறிப்பிடத்தக்கது.