ரஷித்கானின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக பங்களாதேஷ் அணி தோல்வியை சந்தித்தது.
பங்களாதேஷ் - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி டேராடூனில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக முகமது ஷசாத் 40 ரன்கள் எடுத்தார். சாய்முல்லா ஷென்வாரி 36 ரன்களும் உஸ்மான் கனி 26 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய பங்களதேஷ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி. முதல் ஓவரின் முதல் பந்தை சுழல் பந்துவீச்சாளர் முஜிபுர் ரஹ்மான் (ஐபிஎல்-லில் பஞ்சாப் அணிக்காக ஆடியவர்) வீசினார். முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார் பங்களாதேஷின் தமிம் இக்பால். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான லிஸ்டன் தாஸ் 30 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்தவர்கள் யாருமே நிலைத்து நிற்கவில்லை. ஆப்கானிஸ்தான் சுழல் புயல்கள் சரியான நெருக்கடி கொடுத்ததால் 19 ஓவர்களில் 122 ரன்களுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்டையும் இழந்தது, பங்களாதேஷ். இதன் மூலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
போட்டியில் பலத்த கைத்தட்டல்களுக்கு இடையே பந்துவீசிய ரஷித்கானின் கூக்ளி பந்துகளை சந்திக்க முடியாமல் பங்களாதேஷ் வீரர்கள் திணறினர். பதினோறாவது ஓவரை வீச வந்த ரஷித் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டை வீழ்த்தி போட்டியை பரபரப்பாக்கினார். முதலில் முஷ்பிஹூர் ரஹிமும் அடுத்தப் பந்தில் சபீர் ரஹ்மானும் அவரது பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அவர் 3 ஒவர்கள் வீசி வெறும் 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷபூர் ஸட்ரன் 3 விக்கெட்டுகளையும் முமகது நபி 2 விக்கெட்டுகளையும் ஜனத், முஜிப் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஆட்டநாயகன் விருது ரஷித்கானுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டி20 போட்டி, நாளை நடக்கிறது