டி20 போட்டிகளில் சிறந்த ஸ்பின்னர் இவர்தான்? டெண்டுல்கர் கணிப்பு!
டி20 போட்டிகளில் உலகின் தலைசிறந்த ஸ்பின்னர் ரஷித்கான் தான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஐ.பிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா, நாளை நிறைவு பெறுகிறது. இதற்கு முன், 8 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் 56 லீக் போட்டிகள் நடந்தன. இதில், பிளே ஆப் சுற்றுக்கு ஐதராபாத், சென்னை, ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் முன்னேறின. முதலாவது தகுதிச் சுற்றில் சென்னை அணி, ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்நிலையில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ஐதராபாத்தும், வெளியேற்றுதல் சுற்றில் வெற்றிகண்ட கொல்கத்தா அணியும் இறுதிப்போட்டிக்கான 2வது தகுதி சுற்றில் நேற்று மோதின. கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. ரஷித் கான் 10 பந்தில் 34 ரன்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் அந்த அணி தோல்வி அடைந்தது. ஐதராபாத் சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நேற்றையை போட்டியில் பீல்டிங், பேட்டிங், பந்துவீச்சு என மூன்றிலும் கலக்கினார் ரஷித்கான். பேட்டிங்கில் 10 பந்துகளில் 34 குவித்து எல்லோரையும் மிரள வைத்த அவர், பந்துவீச்சிலும் அசத்தினார். 4 ஓவர்கள் வீசி, 19 ரன்களை விட்டுக்கொடுத்த அவர் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அருமையான 2 கேட்ச்களையும் பிடித்தார். அதோடு நிதிஷ் ராணாவை ரன் அவுட் ஆக்கினார். இந்த ரன் அவுட்தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ஆல்ரவுண்டராக ஜொலித்த அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவரை ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ‘ரஷித்கான் சிறந்த ஸ்பின்னர் என்று எப்போதும் நினைப்பேன். ஆனால், டி20 போட்டிகளில் அவர்தான் உலகின் தலைசிறந்த ஸ்பின்னர் என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. கவனிக்கவும், அவரிடம் பேட்டிங் திறமையும் இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.