அலங்காநல்லூரில் 16 காளைகளைத் தழுவிய இளைஞர் - முதல் பரிசு கார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளைத் தழுவிய ரஞ்சித்குமாருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. இதில், 739 காளைகள், 695 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 16 காளைகளைத் தழுவிய ரஞ்சித்குமார் முதலிடத்தை பிடித்தார். 14 காளைகளைத் தழுவிய கார்த்திக் 2வது இடத்தையும் 13 காளைகளைத் தழுவிய கணேசன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
முதலிடம் பிடித்த ரஞ்சித்துக்கு சாண்ட்ரோ கார் முதலமைச்சர் அலுவலகத்தில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஞ்சித்துக்கு ரூ. 7 லட்சம் மதிப்புள்ள 4 பசு மாடுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஞ்சித், கடந்த ஆண்டு முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் ராம்குமாரின் சகோதரர் ஆவார்.
இரண்டாம் இடத்தை பிடித்த கார்த்திக்கிற்கு சிடி 100 பைக்கும் மூன்றாம் பரிசு பெற்ற கணேசனுக்கு ஊக்கத்தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் வெற்றி பெற்ற காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசு வென்ற கருப்பன் காளைக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது. இது துணை முதல்வர் அலுவலகத்தில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரத்தில் முதலிடம் பிடித்த ராவணன் காளை அலங்காநல்லூரில் 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.