ரஞ்சி கோப்பை: 379 ரன்கள் குவித்த ப்ரித்வி ஷா! ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி சாதனை!

ரஞ்சி கோப்பை: 379 ரன்கள் குவித்த ப்ரித்வி ஷா! ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி சாதனை!
ரஞ்சி கோப்பை: 379 ரன்கள் குவித்த ப்ரித்வி ஷா! ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி சாதனை!

ரஞ்சிக்கோப்பை தொடரில் மும்பை அணிக்கு விளையாடும் பிரித்வி ஷா, அசாம் அணிக்கு எதிரான போட்டியில் 379 ரன்கள் குவித்துள்ளார்.

உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், தொடர்ந்து இந்திய அணியில் தேர்வு செய்யப்படாமல் இருந்து வருகிறார் பிரித்வி ஷா. இந்நிலையில் 23 வயதான ப்ரித்வி ஷா, ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் பல கிரிக்கெட் ஜாம்பவான்களின் ரன்களை பின்னுக்கு தள்ளி, இரண்டாவது அதிகபட்ச ரஞ்சிக்கோப்பை தனிநபர் ரன்களை குவித்துள்ளார். 98.96 ஸ்டிரைக் ரேட்டில் 49 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசி 383 பந்துகளில் 379 ரன்கள் குவித்துள்ளார் பிரித்வி ஷா.

2022-2023ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக்கோப்பை தொடர் கடந்த மாதம் டிசம்பர் 13ஆம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதன் இறுதிப்போட்டி பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் டேபிள் டாப்பருக்கான லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. பல வீரர்கள் அவர்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தொடங்கிய மும்பை மற்றும் அசாம் அணிகளுக்கு இடையிலான போட்டியில், டாஸ் வென்ற அசாம் அணி பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்து வருகிறது மும்பை அணி. ஓபனராக களமிறங்கிய பிரித்வி ஷா, கேப்டன் அஜிங்கியா ரஹானேவுடன் கைக்கோர்த்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி, தன்னுடைய முதல் 300 ரன்களை எட்டினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிவந்த பிரித்வி ஷா, இதுவரை ரஞ்சிக்கோப்பை தொடரில் அடிக்கப்பட்ட 443* ரன்கள் என்ற இமாலய சாதனையை முறியடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ரியான் பராக் வீசிய பந்தில் 379 ரன்களில் லெக் பை விக்கெட்டில் அவுட்டாகி வெளியேறினார். 98.96 ஸ்டிரைக் ரேட்டில் 49 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசி 383 பந்துகளில் 379 ரன்கள் குவித்துள்ளார் பிரித்வி ஷா.

இந்தியா அணியில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வரும் பிரித்வி ஷா, ஒவ்வொரு முறை உள்நாட்டு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையிலும் ஏமாற்றத்தையே சந்தித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பல முன்னாள் ஜாம்பவான் வீரர்களின் அதிகபட்ச ரன்களை பின்னுக்கு தள்ளி, இந்திய அணியின் சலெக்டர் போர்டை தட்டியுள்ளார்.

மும்பை அணிக்காக சுனில் கவாஸ்கர் 340 ரன்கள் மற்றும் சஞ்சை மஞ்ரேக்கர் 377 ரன்கள், ஹைத்ராபாத் அணிக்காக விவிஎஸ் லக்ஸ்மன் 353 ரன்கள், சவுராஸ்டிரா அணிக்காக புஜாரா 352 ரன்கள் என அனைவரது ரெக்கார்டையும் பின்னுக்கு தள்ளி, ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் 379 ரன்கள் என்ற இரண்டாவது அதிகபட்ச பெரிய ஸ்கோரை அடித்துள்ளார் ப்ரித்வி. 1948-49ஆம் ஆண்டு ரஞ்சிக்கோப்பை தொடரில் மஹாராஸ்டிரா அணிக்காக பிபி நிம்பல்கர் 443* ரன்களை குவித்தது தான் இதுவரை முதலிடத்தில் இருந்துவருகிறது.

பிசிசிஐ தேர்வுக் குழு இன்னும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒயிட் பால் இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை அறிவிக்காமல் இருக்கிறது. இந்நிலையில் ப்ரித்வி ஷாவின் 379 ரன்கள் நாக், இந்திய அணியில் அவருக்கான இடத்தை பெற்றுத்தருமா என்று பார்ப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com