தொடரில் முன்னிலை பெற இந்திய அணி தீவிரம்: ராஞ்சி ஆடுகளம் எப்படி?
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வரும் 16ம் தேதி தொடங்குகிறது.
பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளதால் தொடர் சமநிலையில் உள்ளது. இந்தநிலையில், மூன்றாவது போட்டிக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இதற்காக ராஞ்சி ஆடுகளத்தை சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றபடி தயார்செய்ய இந்திய அணி நிர்வாகம் கூறியுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்களும், இயான் சேப்பல் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். பெங்களூரு டெஸ்டில் இந்திய அணியின் வெற்றியில் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு முக்கியமானது. இதனால் ராஞ்சி மைதானத்தை முதல் ஓவரில் இருந்தே சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் படி தயார் செய்ய இந்திய அணி நிர்வாகம் வாய்மொழி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன. ராஞ்சி மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற 4 ஒருநாள் போட்டிகளில் சுழற்பந்துவீச்சாளர்கள் 24 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். ராஞ்சி ஆடுகளம் இயல்பாகவே சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடியதாகும்.