‘பிளே ஆஃப்’ வாய்ப்பில் இருந்து பெங்களூர் அணியை வெளியேற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஆஃப் தக்க வைத்துக் கொண்டது.
இன்று மாலை 4 மணிக்கு ஜெய்ப்பூரில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ‘பிளேஆஃப்’ வாய்ப்பில் நீடிக்கும். தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும் என்ற நிலையில் இரு அணிகளும் களம் இறங்கின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ராகுல் திரிபாதி மற்றும் ஆர்ச்சர் களம் இறங்கினர். 4 பந்துகளை சந்தித்த ஆர்ச்சர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் ரகானே களம் இறங்கினார். இந்த ஜோடி ராஜஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரராக தனக்கு கிடைத்த வாய்ப்பை திரிபாதி சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார். அணியின் ஸ்கோர் 101 ஆக இருந்தபோது ரகானே 31 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இது வரை அணியில் சேர்க்கப்படாமல் இருந்த தென் ஆப்ரிக்காவின் கிளாசன் களம் கண்டார். இவர் 21 ரன்களில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும், தொடக்க வீரர் ராகுல் திரிபாதி நிலைத்து நின்று அரைசதம் கண்டார்.
இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஒவர் முடிவுக்கு 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. இறுதிவரை ஆட்டமிழக்காத திரிபாதி 58 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். அதில் 3 சிக்சர்களும், 5 பவுண்டர்களும் அடங்கும். அடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூர் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக பார்த்திவ் படேல் மற்றும் விராட் கோலி களமிறங்கினர். இரண்டாவது ஒவரின் 5 பந்தில் கேப்டன் கோலி 9 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த டி வில்லியர்ஸ், பார்த்திவ் படேலுடன் இணைந்தார். இந்த ஜோடி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது.
குறிப்பாக டி வில்லியர்ஸ் வழக்கம் போல் அதிரடியில் மிரட்டினார். இதனால் பெங்களூர் அணி எளிதாகவே வெல்லும் என்ற நிலை இருந்தது. பார்த்திவ் படேல் 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் வருவதும், போவதுமாக இருந்ததால் பெங்களூர் அணியின் ரன்ரேட் குறைந்தது. ஒரு கட்டத்தில் பெங்களூர் அணி முழுமையாக நம்பி இருந்த டி வில்லியர்சும் 35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பெங்களூர் அணி ‘பிளே ஆஃப்’ கனவு மெல்ல மெல்ல கரையத் தொடங்கியது. இறுதியில் 19.2 ஒவரில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 134 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் இதுவரை பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்து வந்த பெங்களூர் அணி இத்தொடரில் இருந்து வெளியேறியது.