ஆஸ்திரேலியர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துள்ள ராஜஸ்தான் அணி !
கடந்த சில சீசன்களாகவே ஐபிஎல்லில் மிகவும் சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்தாண்டு முக்கிய பொறுப்புகளில் ஆஸ்திரேலியர்களை நியமித்துள்ளது.
ஷேன் வார்ன் ஐபிஎல் கிரிக்கெட்டின் முதல் சீசனில் இருந்தே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் கேப்டன் அல்லது தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்களையே நியமித்து வருகிறது. 2008 முதல் 2011 வரையிலான 4 சீசன்களிலும் ஆஸ்திரேலியாவின் மூத்த வீரரான ஷேன் வார்னையே கேப்டனாக அந்த அணி நியமித்து இருந்தது.
அதே சமயம் மற்ற அணிகள் அனைத்தும் வழக்கம்போல தலைமை பயிற்சியாளருக்கு என தனியே ஒரு ஆளுமையை நியமித்தபோது, அணியின் கேப்டனான ஷேன் வார்னையே பயிற்சியாளராகவும் பணியமர்த்தியது ராஜஸ்தான் நிர்வாகம். அதற்கு கிடைத்த நல்ல பலனாக ஐபிஎல் ஆதி சீசனில் சாம்பியனாக மகுடம் சூடியது ராஜஸ்தான் அணி. மற்ற 7 அணிகளுக்கும் இந்திய வீரர்கள் கேப்டனாக இருந்த போது, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேப்டன் கோப்பையை தட்டிச் சென்று விட்டார் என ரசிகர்கள் மத்தியில் ஒரு உறுத்தலும் இருந்தது.
ஷேன் வாட்சன், ஜேம்ஸ் ஃபாக்னர், ஸ்டீவ் ஸ்மித், ஷேன் வார்ன், பிராட் ஹாட்ஜ் என அணியில் களமிறக்கப்படும் வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். ஒரு மினி ஆஸ்திரேலிய அணியாக அந்த சீசன்களில் வலம் வந்தது ராஜஸ்தான் அணி. 2012க்கு பின்பு பெரும்பாலான சீசன்களில் தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த பேடி அப்டன் ராஜஸ்தான் அணிக்கு பயிற்சியளித்தார். ஆனால் அணியால் 'TOP FRANCHISE' என்ற நிலையை அடைய முடியவில்லை.
இதனால் நடப்பாண்டு சீசனில் மீண்டும் ஆஸ்திரேலியர்களின் மீது நம்பிக்கையையும், பொறுப்புகளையும் இறக்கி வைத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம். கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித்தையும், தலைமை பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக் டொனால்டையும், ஆலோசகராக அணியின் முன்னாள் தூண் ஷேன் வார்னையும் நியமித்துள்ளது அணி நிர்வாகம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சர்வதேச தரத்திற்கு முன்னேற்றுவதே முதற்கண் நோக்கம் என உறுதியளித்துள்ளார் ஷேன் வார்ன். ஆஸ்திரேலியன் ஃபார்முலா அந்த அணிக்கு கைகொடுக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.