
மணிப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான 5000 மீட்டர் வேகநடை போட்டியில் முதலிடம் பிடித்த காவல் உதவி ஆய்வாளர், கனடாவில் நடைபெறும் உலக அளவிலான தடகளப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.
தேசிய அளவிலான 41-ஆவது மூத்தோர் தடகளப் போட்டி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இம்பாலில் நடைபெற்றது. கடந்த 9-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் தேசிய அளவில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியில் ராஜபாளையம் மொட்டை மலையைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, 5000 மீட்டர் வேக நடை போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார். இவர் பந்தயத் தூரத்தை 28 நிமிடம் 30 வினாடிகளில் கடந்தார். 2-ஆம் இடத்தை கர்நாடகாவும், 3-ஆம் இடத்தை அசாம் மாநிலமும் பிடித்தது.
முதலிடம் பிடித்த காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி வருகின்ற ஆகஸ்ட் மாதம் கனடாவில் நடைபெற உள்ள உலக அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியில் பங்கேற்க இருக்கிறார். முதலிடம் பிடித்த கிருஷ்ணமூர்த்திக்கு காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.