இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெறுகிறது. இன்று அங்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருத்திருப்பதால் போட்டி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை, 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிவிட்டது. இதனால் டி20 தொடரை கைப்பற்றும் நோக்கில் ஆஸ்திரேலிய அணி இருக்கிறது. இதற்காக அந்த அணி, 5 வீரர்களை இந்தப் போட்டிக்காக வரவழைத்திருக்கிறது. இவர்கள் அணியை வெற்றிபெற வைப்பார்கள் என்று ஆஸ்திரேலியா நம்பிக்கையில் உள்ளது. இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெரண்டோர்ஃப் அறிமுக வீரராக களம் இறங்க வாய்ப்பிருக்கிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 20 ஓவர் கிரிக்கெட்டில் நேருக்கு நேர் சந்தித்துள்ள 13 போட்டிகளில், ஒன்பதில் இந்திய அணியே வெற்றி பெற்றிருக்கிறது. கடைசியாக நடந்த 6 போட்டிகளில், ஒன்றில் கூட ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறவில்லை.
ராஞ்சியில் நேற்று மழை பெய்ததால் இந்திய வீரர்கள் பயிற்சி பாதிக்கப்பட்டது. உள்ளரங்கில் அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அது ஆட்டத்தை பாதிக்க வாய்ப்பிருக்கிறது.