5-வது ஒரு நாள் கிரிக்கெட்: நாளைய போட்டியிலும் மழை மிரட்டும்!
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் மழைக் குறுக்கிட வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, நான்காவது ஒரு நாள் தொடரில் தோற்றது. இதையடுத்து தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் ஐந்தாவது ஒரு நாள் போட்டி போர்ட் எலிசபெத்தில் நாளை நடக்கிறது.
ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 4-வது ஒரு நாள் போட்டியில், மழைக் குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, வெற்றி இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இது தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இந்நிலையில் ஐந்தாவது ஒரு நாள் போட்டி நடக்கும் போர்ட் எலிசபெத்திலும் நாளை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த மைதானத்தில் இந்திய அணி, ஆறு ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் ஒன்றில் கூட வெற்றிபெற்றதில்லை.