பாலியல் புகார்: கிரிக்கெட் வாரிய அதிகாரிக்கு திடீர் கட்டுப்பாடு!
பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ ராகுல் ஜோரி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோரி. இவர் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வரும் முன், தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றியுள்ளார். அப்போது அவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் புகார் கூறியிருந்தார். இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் அவரிடம் ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்டது. இன்னும் கால அவகாசம் கேட்டிருந்தார் ராகுல்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின், தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டம் சிங்கப்பூரில் வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் ராகுல் ஜோரி, கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், இந்த பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவரை கலந்துகொள்ள வேண்டாம் என்று கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. அவருக்குப் பதிலாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அமிதாப் சவுத்ரி கலந்துகொள்வார் என்று தெரிகிறது.