2 பேரை டக் அவுட் ஆக்கிய அஸ்வின் ! 4 விக்கெட் சாய்த்த சமி! 263ல் ஆல் அவுட் ஆனது ஆஸி!

2 பேரை டக் அவுட் ஆக்கிய அஸ்வின் ! 4 விக்கெட் சாய்த்த சமி! 263ல் ஆல் அவுட் ஆனது ஆஸி!
2 பேரை டக் அவுட் ஆக்கிய அஸ்வின் ! 4 விக்கெட் சாய்த்த சமி! 263ல் ஆல் அவுட் ஆனது ஆஸி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் சேர்த்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்குபெற்று விளையாடுகிறது. புகழ்பெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. 5 நாள் ஆட்டமாக தொடங்கப்பட்ட போட்டியில், பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் சேர்ந்து 15 விக்கெட்டுகள் சாய்க்க, ரோகித் சர்மாவின் 120 ரன்கள் ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை 3ஆவது நாளிலேயே இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அந்த அணிக்கு எதிராக 3ஆவது பெரிய வெற்றியை பதிவு செய்து அசத்தியது இந்திய அணி.

போட்டியின் முடிவுக்கு முன்னதாக, ஆடுகளத்தின் தன்மையை ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கள் மற்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சித்தன. ஆனால் அதற்கெல்லாம் ஆஸ்திரேலிய வீரரே பதிலடி கொடுக்கும் விதமாக அறிமுக வீரராக களமிறங்கிய டி முர்பி, இந்தியாவிற்கு எதிராக தனது முதல் போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய சாதனையை படைத்தார். மேலும் ஆடுகளத்தில் இடது கை பேட்டர்கள் விளையாடவே முடியாது என்று குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இந்திய இடது கை பேட்டர்களான ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் 70, 84 ரன்கள் அடித்து, அந்த விமர்சனத்திற்கும் பதிலடி கொடுத்தனர்.

இந்நிலையில், பலவிமர்சனங்களை கடந்து இன்று இரண்டாவது போட்டியானது டெல்லி, அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. இந்திய அணியில் சூர்யகுமாருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பியுள்ளார். இந்திய நட்சத்திர பேட்டர் புஜாரா தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். மேலும் பல ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி சொந்த மண்ணின் ஆடுகளத்தில் விளையாடுவதால், 3 வருடமாக இருந்து வரும் டெஸ்ட் சதத்திற்கான வறட்சியை முடித்துவைப்பார் என்ற எதிர்பார்ப்பில் 2ஆவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

லபுசனேவிற்கு மறைமுகமாக வார்னிங் கொடுத்து, விக்கெட்டை தூக்கிய அஸ்வின்!

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பான தொடக்கத்தை கொடுத்த வார்னர் மற்றும் கவாஜா ஜோடி முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் சேர்த்தது. 50 ரன்கள் இருந்த நிலையில் வார்னரை வெளியேற்றி விக்கெட்டை தொடங்கி வைத்தார் ஷமி. பின்னர் ஜோடி சேர்ந்த கவாஜா மற்றும் லபுசனே இருவரில், மார்னஸ் விக்கெட் விழாமல் பார்த்துக்கொள்ள, கவாஜா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கவாஜா அரைசதம் அடித்து அசத்தினார்.

19ஆவது ஓவரில் அஸ்வின் கவாஜாவிற்கு பந்துவீச, நான் ஸ்டிரைக்கில் நின்றிருந்த லபுசனே க்ரீஸை விட்டு வெளிவருவது போல் இருந்ததால், பந்துவீசுவது போல் சென்ற அஸ்வின், பந்தை வீசாமல் திரும்பி வந்தார். அப்போது சுதாரித்து கொண்ட லபுசனே, அஸ்வின் பந்துவீசும் போது ஸ்டம்பிற்கு வெளியில் வந்து நின்றுகொண்டு ரன்கள் ஓடினார். பின்னர் அடுத்த ஓவரை வீசவந்த அஸ்வின் லபுசனேவை இந்தமுறை எல்பிடபள்யூ விக்கெட்டால் வெளியேற்றினார். ரிவியூ கேட்டு காத்திருந்த லபுசனே அவுட்டென வந்தபோது, கோவத்தில் பேட்டை அடித்துகொண்டு கோபத்துடன் வெளியேறினார்.

டக் அவுட்டில் வெளியேற்றிய ஸ்மித்!

பின்னர் களமிறங்கிய ஸ்மித் ஆட்டத்தை மாற்றுவார் என்று எதிர்பார்த்த ஆஸ்திரேலிய அணிக்கு, அதிர்ச்சி கொடுத்தார் அஸ்வின். ஸ்மித் சந்தித்த 3ஆவது பந்திலேயே 0 ரன்னில் அவரை வெளியேற்ற நிலைகுலைந்தது ஆஸ்திரேலிய அணி. தொடர்ந்து களமிறங்கிய டிரவிஸ் ஹெட் விக்கெட்டை ஷமி கைப்பற்றி 12 ரன்னில் வெளியேற்ற 108 ரன்களில் 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலியா.

அதிரடியை வெளிக்காட்டி சதத்தை நோக்கி சென்ற கவாஜா! பறந்து கேட்ச் எடுத்து பெவிலியன் அனுப்பிய ராகுல்!

4 விக்கெட்டுகளை இழந்த பின்னர் ஸ்பின்னர்களை செட்டில் ஆக விடாமல், ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப், அட்டாக்கிங் ஷாட் என அனைத்து வித்தைகளையும் களத்தில் இறக்கி, இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டினார் கவாஜா. 12 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசி 81 ரன்களில் சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கவாஜா, ஜடேஜா வீசிய பந்தில் ரிவர்ஸ் அடிக்க முயற்சிக்க, ஆஃப் சைடில் ஸ்டம்ப் திசையில் நின்றிருந்த கே எல் ராகுல் பறவையை போல பறந்து கேட்சை எடுத்தார். சற்று நேரத்தில் என்ன நடந்தது என்று பார்த்துகொண்டிருந்த கவாஜா, விரக்தியுடன் வெளியேறினார்.

கேரியை 0வில் வெளியேற்றிய அஸ்வின்! தனி ஒருவனாக போராடிய ஹேண்ட்ஸ்கோம்!

கவாஜா அவுட்டான அடுத்த ஓவரிலேயே விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியை 0 ரன்னில் வெளியேற்றினார் அஸ்வின். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆஸ்திரேலியா விரைவாகவே ஆல் அவுட்டாகிவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், களத்தில் இருந்த ஹேண்ட்ஸ்கோம் மற்றும் கேப்டன் கம்மின்ஸ் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, முடிந்தளவு ரன்களை சேர்க்கும் முயற்சியில் இறங்கினர். ஒருபுறம் அவுட்டாகாமல் ஹேண்ட்ஸ்கோம் தாக்கு பிடிக்க, மறுமுனையில் கம்மின்ஸை ஜடேஜா வெளியேற்ற, டெய்ல்ஸ் எண்டர்களை அடுத்தடுத்து போல்டாக்கி வெளியேற்றினார் முகமது ஷமி. ஹேண்ட்ஸ்கோம் 9 பவுண்டரிகள் விளாசி 72 ரன்களுடன் அவுட்டாகாமல் இருக்க, மறுபுறம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 263 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்ஸை முடித்தது.

இந்திய அணியின் தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகள், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினர். இந்தியா தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. முதல் நாள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்தது. ரோகித் 13(34), கே.எல்.ராகுல் 4 (20) ரன்களும் எடுத்த நிலையில் களத்தில் உள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com