‘பொறுமை நாயகன்’ ராகுல் டிராவிட் - விரக்தியை.. வெற்றியாக்கிய கதை..!
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் இன்று 47வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இன்றைய தினத்தில் அவர் தொடர்பான சில தகவல்களை காணலாம்.
1973ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பிறந்த ராகுல் டிராவிட், 1996ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி சர்வதேச இந்திய அணிக்கான ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். அன்று தொடங்கிய அவரது ஆட்டம் 2012ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றது. இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி எனும் இரண்டு பிரம்மாண்டங்களுக்கு இடையே நம்பிக்கை நட்சத்திரமாய் ஜொலித்தவர் தான் ராகுல் டிராவிட். ஒரு போட்டியில் சச்சினுடன் கைகோர்த்தும், அடுத்த போட்டியில் கங்குலியுடன் ஜோடி சேர்ந்தும் இந்திய அணிக்காக கடுமையாக போராடியவர். இதனால் இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டம் சத்தமின்றி இருந்தது. இதேபோன்று இவரது பேட்டிங்கும் சத்தமின்றியே இருக்கும். கிரிக்கெட்டின் ‘பொறுமை நாயகன்’ என டிராவிட்டை கூறலாம். பேட்டிங்கில் மட்டுமின்றி குணத்திலும் டிராவிட் மிகுந்த பொறுமைசாலி தான். டெஸ்ட் போட்டிகளில் இவரது விக்கெட்டை சாய்ப்பது எப்பேற்பட்ட பவுலருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தது. ஆஸ்திரேலிய பவுலர்களை கூட, டிராவிட் அலறவிட்டிருக்கிறார்.
சர்வதேச அளவில் 164 டெஸ்ட் போட்டிகள், 344 ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 போட்டி என உழைத்துள்ள ராகுல் டிராவிட், 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியுடன் ஓய்வினை அறிவித்தார். அவரது அறிவிப்பு இளம் தலைமுறையினருக்கு வழி விடும் வகையில் இருந்தாலும், இந்திய அணிக்கு பேரிழப்பாகவும் அமைந்தது. அனுபவம், அமைதி, ஆக்கப்பூர்வம் என அனைத்து வகைகளிலும் இந்திய அணிக்கு பெரும் துணையாக இருந்த ஒரு தூண் விடை பெற்றதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கூறினர்.
ஓய்வு பெற்றபோது பேசிய டிராவிட், கிரிக்கெட்டில் தன்னுடைய அணுகுமுறை பொதுவாக எளிமையானது என தெரிவித்திருந்தார். அணிக்காக முழு அர்ப்பணிப்பையும் தந்து, கண்ணியத்தோடு விளையாடி, ஆட்டத்தின் ஆன்மாவை காப்பதே தன்னுடைய அணுகுமுறை என்றார். தான் சில சமயங்களில் தோற்றிருந்தாலும், எப்போதும் முயற்சியை நிறுத்தியதே இல்லை என்று கூறியிருந்தார். அதனால், தான் சோகத்தோடு விடைபெற்றாலும், பெருமிதத்தோடும் விடை கொடுப்பதாக அன்று ராகுல் கூறியது அனைவருக்கும் உருக்கத்தைக் கொடுத்தது. இந்த பேச்சு மட்டுமல்ல இதுபோன்ற பல உருக்கமான பேச்சுக்களையும், அழுத்தமான கருத்துகளையும் ராகுல் டிராவிட் பலமுறை தெரிவித்திருக்கிறார்.
பிட்ஸ் பிலானி பட்டமளிப்பு விழாவில் ‘காத்திருப்பு’ குறித்து ராகுல் ஆற்றிய உரையில், “என் பெற்றோர்கள் சொன்னதைக்கேட்டு எனது தலைமையாசிரியர் என்னைக் கிரிக்கெட் ஆட விடாமல் செய்திருந்தால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன்” என தெரிவித்திருந்தார். தேர்வுகளின் போது அவசர அவசரமாகப் படித்துவிட்டு தேர்வுகளை எழுதியதாகவும், அதே நேரத்தில் ரஞ்சி போட்டிகளில் தான் ஆடிக்கொண்டு இருந்ததாகவும் கூறினார். டென்னிஸ் பந்தை பதினைந்து கோணங்களில் இருந்து வீசச்செய்து பயிற்சி பெற்றதாகவும், வேகப்பந்து வீச்சாளர்களை இன்னமும் சிறப்பாக எதிர்கொள்ள தன்னைத் தயார்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
19 வயதிற்குட்பட்ட அணிக்கு கேப்டனாக இருந்து சிறப்பாக விளையாடிய போதும், தன்னால் சீனியர் அணிக்குள் நுழைய முடியவில்லை எனவும், ஐந்து வருடங்களாக உள்ளூர் போட்டிகளில் மட்டுமே ஆடியதாகவும் கூறினார். அந்த சமயத்தில் தனது நிலையை நினைத்து வருந்தாமல், தன்னுடைய பைக்கில் ஒரு வாசகத்தை எழுதிக்கொண்டதாகவும் ராகுல் குறிப்பிட்டிருந்தார். அந்த வாசகம் என்னவென்றால், “கடவுள் தாமதப்படுத்துகிறார் என்பது கடவுள் தரவேமாட்டார் என்று அர்த்தமில்லை!” என்பதாகும்.
இவ்வாறு ஐந்து வருடம் காத்திருந்திருக்காவிட்டால், அதன்பின்னர் கிரிக்கெட்டில் தான் பெற்ற வெற்றிகளை சந்தித்திருக்கவே முடியாது என்ற உண்மையை உணர்ந்ததாகவும் டிராவிட் உருக்கமாக தெரிவித்திருந்தார். அவரது இந்தப் பேச்சு, வாய்ப்பு கிடைக்காமல் காத்திருக்கும் அனைத்து இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக அமைந்தது. அத்துடன் வாய்ப்பு கிடைக்காத நாட்களில் தான் பெற்ற டென்னிஸ் பந்தின் பயிற்சியே, பிற்காலத்தில் வார்னே, முரளிதரன், வாசிம் அக்ரம், மெக்ராத், ஆலன் டொனால்ட் போன்ற ஜாம்பவான்களின் பந்துகளை எதிர்கொள்ள உதவியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்தப் பேச்சு வாய்ப்பு கிடைக்காத காலங்களில் இளைஞர்கள் சோர்ந்திருக்காமல், தங்களை தயார் படுத்த வேண்டும் என்பதை உணர்த்தியிருந்தது.
இத்தகைய ராகுல் டிராவிட். தற்போது ஓய்விலிருந்தாலும், அவரது அழுத்தமான கருத்துகள் என்றும் ஓய்வு பெறமால் இளைஞர்களுக்கு வழிகாட்டுதலாய் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.