"டிராவிட்டின் ஹனிமூன் காலம் முடிந்துவிட்டது” - தோல்வி குறித்து முன்னாள் வீரர் விமர்சனம்

"டிராவிட்டின் ஹனிமூன் காலம் முடிந்துவிட்டது” - தோல்வி குறித்து முன்னாள் வீரர் விமர்சனம்
"டிராவிட்டின் ஹனிமூன் காலம் முடிந்துவிட்டது” - தோல்வி குறித்து முன்னாள் வீரர் விமர்சனம்

தேனிலவு காலம் முடிந்து, நெருக்கடியான காலம் வரப்போகிறது என்பதை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் புரிந்துகொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரரும், தேர்வுக்குழு அதிகாரியுமான சபா கரீம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று ஆட்டங்களில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது அபார திறமையைக் காட்டி வெற்றிபெற்றது. ஆனால், அதன்பிறகு வந்த சூப்பர் 4 சுற்று ஆட்டங்களில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியிடம் தொடர்ந்து தோல்வியடைந்த இந்திய அணி இறுதிச் சுற்று போட்டியிலிருந்து வெளியேறியது. கடைசியாக நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் மட்டும் ஆறுதல் வெற்றி பெற்றது. அணியில் நல்ல வீரர்கள் இருந்தும், பிளேயிங் 11-ல் சரியான வீரர்களை தேர்வு செய்யாததால், தொடர் தோல்விகளை இந்திய அணி சந்தித்தது.

இதனால் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. தீபக் சாஹர், தினேஷ் கார்த்திக், உம்ரான் மாலிக் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படாததும், காயத்தால் ரவீந்திர ஜடேஜா விலகியதும் தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில், முன்னாள் விக்கெட் கீப்பரும், தேர்வுக்குழு அதிகாரியுமான சபா கரீம் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதில், “புதிய தலைமைப் பயிற்சியாளர் என்ற தேனிலவு காலம் முடிந்துவிட்டது என்பதை ராகுல் டிராவிட் கூட அறிந்திருந்திருக்கிறார். அவர் சிறப்பாக செயல்பட தன்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறார்.

ஆனால் அத்தகைய முயற்சிகள் இதுவரை வெற்றியாக மாற்றப்படவில்லை. ராகுல் டிராவிட் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார் என்று ஒருவர் எதிர்பார்க்கலாம். உண்மையில் ராகுல் ட்ராவிட்டிற்கு இது நெருக்கடியான நேரம். அக்டோபர் மாதம் டி20 உலகக் கோப்பை வரவிருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வரவுள்ளது. இந்த இரண்டு பெரிய ஐசிசி நிகழ்வுகள் மற்றும் இந்த இரண்டு சாம்பியன்ஷிப்களையும் இந்தியா வெல்ல முடிந்தால் மட்டுமே, இந்திய அணிக்கு தனது உழைப்பை கொடுத்தது குறித்து ராகுல் ட்ராவிட்டால் திருப்தி அடைய முடியும்.

ட்ராவிட்டின் வழிகாட்டுதலின் கீழ் நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் (இரண்டு முறை), இலங்கை, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா வென்றிருக்கலாம். மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்திருக்கலாம், ஆனால் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பை தொடரை கைப்பற்ற தவறியது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளிடம் மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

ராகுல் ட்ராவிட் வெற்றிபெற விரும்பினாலும் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. என்னை பொறுத்தவரையில் ஒயிட் பால் கிரிக்கெட் வெற்றிகளுக்குப் பதிலாக, டெஸ்ட்டில் வெற்றி பெற்றிருந்திருக்கலாம் எனக் கூறுவேன். ஐசிசியின் (SENA - South Africa, England, New Zealand and Australia) நாடுகளை டெஸ்ட் தொடர்களில் வென்றால் மட்டுமே தனது பயிற்சி வாழ்க்கையின் வெற்றிகரமான பதவிக் காலத்தை அவரால் வரையறுக்க முடியும் என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு ராகுல் விவேகமானவராகவும், புத்திசாலியாகவும் இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com