'அன்றும் இன்றும் இந்திய அணியின் சுவர்' - ராகுல் டிராவிட் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

'அன்றும் இன்றும் இந்திய அணியின் சுவர்' - ராகுல் டிராவிட் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
'அன்றும் இன்றும் இந்திய அணியின் சுவர்' - ராகுல் டிராவிட் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் இன்று தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் சுவராக அன்றிலிருந்து இன்றுவரை ராகுல் டிராவிட்டின் சகாப்தம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அவரது அசர வைக்கும் சாதனைகளையும் கிரிக்கெட் பயணத்தையும் இங்கே சுருக்கமாக காணலாம்.

* ராகுல் டிராவிட் 1996ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக களமிறங்கினார். இதுவரை விளையாடிய 164 டெஸ்ட் போட்டிகளில் 36 சதங்கள் மற்றும் 63 அரை சதங்கள் அடித்துள்ளார். அத்துடன் 13,288 ரன்கள் எடுத்துள்ளார். அதே ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் களமிறங்கினார் டிராவிட். இதுவரை அவர் விளையாடிய 344 ஒருநாள் போட்டிகளில் 12 சதங்கள் மற்றும் 83 அரைசதங்களுடன் 10,889 ரன்களை குவித்துள்ளார்.

* டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட்டின் விக்கெட்டை வீழ்த்த எதிரணியினர் மிகவும் சிரமப்படுவர். எப்பேர்ப்பட்ட தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் வீசும் பந்துகளை எத்தனை மணிநேரம் வேண்டுமானாலும் அசராமல் சுவர் போல நின்று தடுத்து பேட்டிங் செய்யும் திறமை படைத்தவர். இதனால்தான் டிராவிட்டை 'The Wall' என்று அழைக்கிறது கிரிக்கெட் உலகம்.

* கங்குலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலக இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பை கவனித்தார் டிராவிட். அவரது தலைமையின் கீழ் இந்தியா 79 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 42 போட்டிகளில் வென்றுள்ளது. குறிப்பாக ரன்களை சேஸ் செய்யும் போது தொடர்ச்சியாக 14 வெற்றிகளை பெற்று உலக சாதனையை படைத்திருந்தது இந்தியா.

* கடந்த 2005இல் தோனி, இலங்கை அணிக்கு எதிராக 183 ரன்களை பதிவு செய்திருந்தார். அதற்கு பக்கபலமாக நின்றவர் டிராவிட். மிடில் ஆர்டரில் களம் இறங்க வேண்டிய தோனி முன்கூட்டியே மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் இறக்கி விளையாட செய்ததும் டிராவிட் தான். அந்த போட்டியில் அவர்தான் கேப்டன்.

* 2000-ஆம் ஆண்டு வாக்கில் இந்திய அணிக்கு முழுநேர விக்கெட் கீப்பர் இல்லாத நிலையில் கிளவுஸை தன் கைகளில் மாட்டிக் கொண்டு விக்கெட் கீப்பிங் பணியை கவனித்தவர். இந்திய அணிக்காக பாரத்தீவ் பட்டேல், தினேஷ் கார்த்திக், மகேந்திர சிங் தோனி மாதிரியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் அடையாளம் காணப்படும் வரும் டிராவிட் இந்த ரோலை தொடர்ந்தார்.

* தனது 16 வருட டெஸ்ட் கேரியரில் அதிக பந்துகளை சந்தித்த வீரர் இவர்தான். 31,258 பந்துகளை சந்தித்திருக்கிறார். இவரை அடுத்து சச்சின் டெண்டுல்கர் 29,437 பந்துகளை சந்தித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக நேரம் களத்தில் நின்றவரும் டிராவிட்தான். 735 மணி நேரம், 52 நிமிடம் களத்தில் நின்றிருக்கிறார்.

* டிராவிட் சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, ஹாக்கி வீரரும் கூட. கர்நாடக அணிக்காக ஜூனியர் அளவிலான மாநில ஹாக்கி போட்டியில் விளையாடியிருக்கிறார்.

* 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியுடன் ஓய்வினை அறிவித்தார்.

* கடந்த 2016 முதல் 2019 வரை 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணி மற்றும் இந்திய ஏ அணிக்கு பயிற்சியாளராக டிராவிட் செயல்பட்டுள்ளார். ஆனார். திறமைவாய்ந்த இளம் வீரர்களை உருவாக்கி இந்திய அணிக்கு ஏற்றுமதி செய்யும் பொறுப்பை சிறப்பாக செய்து வந்தார் டிராவிட். அவர் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளத்தால்தான் இந்திய அணிக்கு பேட்டிங், பந்துவீச்சு, ஆல்-ரவுண்டர்கள் பிரிவில் ஏராளமான வீரர்கள் இருக்கிறார்கள். பின்னர் 2019-இல் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட்டை நியமித்தது பிசிசிஐ.

* இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த நவம்பரில் ராகுல் டிராவிட்டை புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்தது பிசிசிஐ. இப்போது டிராவிட்டின் பயிற்சியில் தென் ஆப்பிரிக்கவுடனான டெஸ்ட் பேட்டியில் இந்திய விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com