ராகுல், ரெய்னா, சேஹல், குல்தீப் மிரட்டல்: சுருண்டது அயர்லாந்து

ராகுல், ரெய்னா, சேஹல், குல்தீப் மிரட்டல்: சுருண்டது அயர்லாந்து
ராகுல், ரெய்னா, சேஹல், குல்தீப் மிரட்டல்: சுருண்டது அயர்லாந்து

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட அங்கு சென்றுள்ளது. இதற்கிடையே அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடியது. டப்ளினில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி அதே மைதானத்தில் நேற்று நடந்தது. 

இந்திய தரப்பில் சோதனை முயற்சியாக சில மாற்றங்களைச் செய்ய இருப்பதாக கேப்டன் விராத் கோலி கூறியிருந்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர் தவான், விக்கெட் கீப்பர் தோனி, வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டிருந்தனர்.

டாஸ் வென்ற அயர்லாந்து கேப்டன் கேரி வில்சன் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி சார்பில் ராகுலும் கேப்டன் விராத் கோலியும் களமிறங்கினர். கோலி 9 ரன்களில் கேட்ச் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து ராகுலுடன் இணைந்தார் சுரேஷ் ரெய்னா. இருவரும் அதிரடியாக விளாசினர். இதனால் அணியின் ரன்ரேட் அதிகரித்தது. 30 பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்த ராகுல் அவுட் ஆனார். 45 பந்தில் 69 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுரேஷ் ரெய்னாவும் அவுட் ஆனார்.

பின்னர் வந்த ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக களமிறங்கிய மணிஷ் பாண்டேவும் ஹர்திக் பாண்டியாவும் அதிரடியாக விளையாடினர். பாண்டியா 9 பந்துகளில் 4 சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 32 ரன்கள் சேர்த்தார். மணிஷ் பாண்டே 21 ரன்கள் எடுக்க, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது. அயர்லாந்து தரப்பில் கெவின் ஓ பிரையன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆனது. அதிகப்பட்சமாக கேப்டன் வில்சன் 15 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால், அந்த அணி, 12.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இந்திய அணியின் தரப்பில் சேஹல், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும், சித்தார்த் கவுல், பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. டி20 போட்டியில் இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இது.
ஆட்டநாயகன் விருது கே.எல் ராகுலுக்கும் தொடர் நாயகன் விருது சேஹலுக்கும் வழங்கப்பட்டது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com