மூதாட்டியின் மீது காரை மோதி விபத்து ஏற்படுத்தியதற்காக இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரஹானேவின் தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஹானே, அவரின் தந்தை மற்றும் குடும்பத்தினருடன் விடுமுறையை கழிப்பதற்காக கொங்கண் பகுதிக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அவர்கள் சென்ற காரை, ரஹானேவின் தந்தை மதுகர் ஓட்டியுள்ளார். அவர்களின் கார் புனே- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது, சாலையில் நின்றுக் கொண்டிருந்த பெண்மணி மீது மோதி உள்ளது.
இந்த விபத்தில் 67 வயதாகும் ஆஷா என்ற மூதாட்டி பலத்த காயமடைந்துள்ளார். பின்னர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காகல் போலீசார், விபத்தை ஏற்படுத்திய மதுகரை கைது செய்துள்ளனர். மதுகர் அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றதால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.