இன்று, 2 வது ஒரு நாள் கிரிக்கெட்: ரஹானேவுக்கு வாய்ப்பு?
இந்தியா-இலங்கை மோதும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் ரஹானே ஆடும் லெவனில் இடம்பிடிப்பார் என்று தெரிகிறது.
இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் தோற்றால், சொந்த மண்ணில் இலங்கையுடன் தொடரை இழந்ததில்லை என்ற பெருமையை இழக்க நேரிடும். இலங்கை அணியும் தொடரை எப்படியாவது கைப்பற்றும் முனைப்பில் ஆடும் என்பதால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும்.
முதலாவது போட்டியில் ரஹானே அணியில் சேர்க்கப்படவில்லை. ’ஒரு நாள் தொடரில் அவரை ஓபனிங் பேட்ஸ்மேனாக கருதுவதால் அதைக் கலைக்க வேண்டாம் என்று அணியில் சேர்க்கவில்லை’ என்று ரோகித் சர்மா கூறியிருந்தார். ஆனால், கடந்த பத்து ஒரு நாள் போட்டிகளில் ரஹானே எடுத்த ரன்கள், 61, 53, 70, 55, 5, 5, 39, 60, 72, 103. மொத்தம் 523 ரன்கள். ஆவரேஜ் 52.30.
ரோகித்தும் விராத் கோலியும் தான் கடந்த 10 போட்டிகளில் ரஹானேயை விட அதிக ரன்கள் எடுத்துள்ளனர். இதனால் அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இன்றைய போட்டியில் அவர் களமிறங்க வாய்ப்புள்ளது. மொகாலியில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. போட்டி, காலை 11.30 மணிக்குத் தொடங்கும்.