'23 வெறும் எண்ணாக இருந்தது; நீங்கள் சாதித்து விட்டீர்கள்' - நோவக் ஜோகோவிச்சுக்கு நடால் வாழ்த்து

23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்த நோவக் ஜோகோவிச்-க்கு ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Rafael Nadal & Novak Djokovic
Rafael Nadal & Novak DjokovicFile Image

பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நார்வே வீரர் காஸ்பர் ரூட்டை வீழ்த்தியதைத் தொடர்ந்து, டென்னிஸ் சகாப்தத்தில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றை படைத்தார். காஸ்பர் ரூட்டை 7-6 (7-1), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். 34வது முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் விளையாடிய ஜோகோவிச் பெறும் 23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

முன்னதாக, ஆடவர் ஒற்றையர் டென்னிஸில் ரஃபேல் நடால் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பெற்றதே சாதனையாக இருந்தது. அதனை ஜோகோவிச் முறியடித்திருக்கிறார். ஒவ்வொரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் குறைந்தது மூன்று முறை வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் ஜோகோவிச் படைத்தார். இதில் இன்னொரு ஆச்சரியமாக, ஜோகோவிச் வென்ற 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் 10க்கும் மேற்பட்டவை அவர் 30 வயதுக்குமேல் வென்றவை.

23 கிராண்ட் ஸ்லாம் விபரம்;

ஆஸ்திரேலிய ஓபன் - 10

விம்பிள்டன் - 7

யுஎஸ் ஓபன் - 3

பிரெஞ்சு ஓபன் - 3

Rafael Nadal & Novak Djokovic
Rafael Nadal & Novak Djokovic

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து நோவக் ஜோகோவிச்சுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜோகோவிச்சின் வெற்றிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால். அதில், ''இந்த அற்புதமான சாதனைக்கு ஜோகோவிச்சுக்கு வாழ்த்துகள் பல . 23 என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு சிந்திக்க முடியாத ஒரு எண், அதை நீங்கள் சாதித்துள்ளீர்கள். இதை உங்கள் குடும்பம் மற்றும் டீம் உடன் கொண்டாடுங்கள்'' என்று நடால் வாழ்த்தியிருக்கிறார். காயம் காரணமாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் இம்முறை பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நோவக் ஜோகோவிச் அடுத்த மாதம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கிறார். 2017இல் பெடரருக்குப் பிறகு வேறு எந்த வீரரும் இப்போட்டியில் வாகை சூடவில்லை. அந்த வரலாற்றை ஜோகோவிச் மாற்றிக்காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com