ரபாடா அபார பந்துவீச்சு! பஞ்சாப்புக்கு எதிராக 153 ரன்கள் சேர்த்தது லக்னோ அணி

ரபாடா அபார பந்துவீச்சு! பஞ்சாப்புக்கு எதிராக 153 ரன்கள் சேர்த்தது லக்னோ அணி
ரபாடா அபார பந்துவீச்சு! பஞ்சாப்புக்கு எதிராக 153 ரன்கள் சேர்த்தது லக்னோ அணி

ரபாடா அபார பந்துவீச்சால் பஞ்சாப் கிங்ஸ்-க்கு எதிரான ஆட்டத்தில் 153 ரன்களை மட்டுமே குவித்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.

ஐபிஎல் தொடரின் புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பவுலிங்கை தேர்வு செய்தார். லக்னோ அணியின் ஓப்பனர்களாக டி காக்கும் கேப்டன் ராகுலும் களமிறங்கினர். இருவரும் மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.

3வது ஓவரில் ரபாடாவிடம் சிக்கி கேப்டன் கே.எல்.ராகுல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த தீபக் ஹூடா டி காக்குடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரபாடா வீசிய 5வது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசி அதகளம் செய்தார். ரிஷி தவான் வீசிய ஓவரில் டி காக் கொடுத்த கடினமான கேட்ச் வாய்ப்பை ரபாடா மிஸ் செய்தார். இருவரும் பொறுமையாக ரன் சேர்ப்பில் ஈடுபட்டதால் ரன் ரேட் 7ஐ தொட்டவாறே பயணித்தது.

ராகுல் சஹார் வீசிய ஓவரில் அவரிடமே மீண்டும் டி காக் கொடுத்த கேட்ச் வாய்ப்பை மிஸ் செய்தார். அதன்பின் பவுண்டரிகளாக விளாசி அரைசதம் நோக்கி வேகமாக முன்னேறிய டி காக்கை ஒரு வழியாக அவுட்டாகினர் பஞ்சாப் பவுலர்கள். சந்தீர் ஷர்மா வீசிய ஓவரில் கிடைத்த கேட்ச் வாய்ப்பை இம்முறை மிஸ் செய்யாமல் ஜித்தேஷ் ஷர்மா சரியாக பிடித்தார். அடுத்து வந்த க்ருனால் பாண்டியா அவசர கதியில் விளையாடி தீபக் ஹூடாவை ரன் அவுட் ஆக்கி வெளியேற்றினார். முந்தைய பந்தில் ரன் அவுட் ஆகி வெளியேறுவதில் இருந்து தப்பித்த அவர், அடுத்த பந்தில் ஹூடாவை வெளியேறும்படி செய்துவிட்டார்.

ஆனால் அவரும் க்ரீஸில் வெகுநேரம் நீடிக்கவில்லை. ரபாடா பந்துவீச்சில் 7 ரன்களை மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து பதோனி, ஸ்டோய்னிஸ் இருவரும் வந்த வேகத்தில் நடையைக் கட்ட, டெத் ஓவர்களில் கடும் நெருக்கடிக்கு ஆளானது லக்னோ அணி. கொஞ்சம் சுதாரித்து ஆடி, சிக்ஸர்களை அடித்து வந்த ஹோல்டரும் ராகுல் சஹார் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். 98 ரன்களுக்கு 1 விக்கெட்டை மட்டும் இழந்து வலுவான நிலையில் இருந்த லக்னோ அணி 111 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது.

அடுத்து வந்த சமீரா சில சிக்ஸர்களை விளாசிவிட்டு ரபாடா பந்துவீச்சில் அவுட்டாகி நடையைக் கட்டினார். அடுத்து ஆவேஷ் கான், மோஹ்சின் கான் இருவரும் இறுதி ஓவர்களில் பொறுமையாக விளையாடி 150 ரன்களை அணி கடக்க உதவினர். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்தது. ரபாடா அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். தற்போது பஞ்சாப் அணி 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com