முரட்டுத்தனமாக நடந்துகொள்வதா? இண்டிகோ ஊழியர் மீது பி.வி.சிந்து புகார்
இண்டிகோ விமான ஊழியர் தன்னிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து புகார் கூறியுள்ளார்.
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, இன்று காலை ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானத்தில் சென்றார். அவர் தந்தையும் உடனிருந்தார். போர்டிங் பாஸ் வாங்கிய பின், இண்டிகோ ஊழியர் அஜீதேஷ் என்பவர் அவரது பேட்மிண்டன் பேக்கை தவறாகக் கையாண்டாராம். இதையடுத்து, ‘லக்கேஜை பத்திரமா கையாளுங்கள்’ என்றார் சிந்து. ஆனால், அதைக் கண்டுகொள்ளாமல் அந்த ஊழியர் முரட்டுத்தனமாக நடந்துகொண்டாராம். விமானப் பணிப்பெண்ணும் பத்திரமாகக் கையாளக் கூறினார். அவரிடமும் அந்த ஊழியர் முரட்டுத்தனமாக நடந்துகொண்டாராம். இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுபற்றி ட்விட்டரில் பதிவு செய்துள்ள சிந்து, ‘இண்டிகோ ஊழியர் அஜீதேஷ் மோசமாகவும் முரட்டுத்தனமாகவும் என்னிடம் நடந்துகொண்டார். இப்படிப்பட்ட ஊழியர்களால் நிறுவனத்தின் நற்பெயர் கெடும்’ என்று கூறியுள்ளார்.
ஆனால், இண்டிகோ நிறுவனம், ‘சிந்து மிகப்பெரிய அளவு பேக் கொண்டு வந்தார். அதை விமானத்தின் உள்ளே வைக்க முடியவில்லை. லக்கேஜில் போடுமாறு ஊழியர் கூறியுள்ளார். இதுதான் நடந்தது. இது தொடர்பாக அவரிடம் பேச முயற்சிக்கிறோம்’ என்று கூறியுள்ளது.