இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் புஜாரா அபார சதமடித்தார். இந்த தொடரில், இது அவருக்கு மூன்றாவது சதம் ஆகும்.
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மூன்று போட்டிகளில் 2-ல் இந்தியாவும், ஒன்றில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியுள்ளது. தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி, இந்தப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.
71 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடி வரும் இந்திய அணி, இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை. அதனால் இந்த தொடரை வென்று புதிய சரித்திரம் படைக்கும் வேட்கையுடன் இந்திய அணி களமிறங்கி உள்ளது. அதே நேரம், ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் உத்வேகத்தில் களமிறங்கி இருக்கிறது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி மயங்க் அகர்வாலும் ராகுலும் களமிறங்கினர். ராகுல் 9 ரன் எடுத்த நிலையில் ஹசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மயங்க் அகர்வாலுடன் புஜாரா இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடி வந் தனர். அபாரமாக ஆடி அரைசதம் அடித்த மயங்க், 77 ரன் எடுத்தபோது, லியான் பந்துவீச்சில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து விராத் கோலி வந்தார். அவரும் நிலைத்து நின்று ஆடவில்லை. அவர் 23 ரன் எடுத்திருந்தபோது, ஹசல்வுட் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பெய்னிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து, துணை கேப்டன் ரஹானே வந்தார். அவரும் புஜாராவும் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தனர். ஆனால், ஸ்டார்க் பந்துவீச்சில் பெய்னிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார், ரஹானே. அவர் 18 ரன் எடுத்தி ருந்தார். அடுத்து விஹாரி வந்தார். தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நின்று ஆடிய புஜாரா, அபார சதமடித்தார். இது அவ ருக்கு 18 வது டெஸ்ட் சதம். இந்த தொடரில் இது அவருக்கு மூன்றாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.