பஞ்சாப்பை பந்தாடிய சென்னை : பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெறித்தனமான வெற்றி..!

பஞ்சாப்பை பந்தாடிய சென்னை : பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெறித்தனமான வெற்றி..!
பஞ்சாப்பை பந்தாடிய சென்னை : பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெறித்தனமான வெற்றி..!

ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 3 பவுண்டரிகளை விளாசிய மயங்க் 19 ரன்களில் 26 ரன்களை எடுத்துவிட்டு அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த மந்தீப் சிங் தனது பங்கிற்கு 16 பந்துகளில் 27 ரன்களை எடுத்துவிட்டு வெளியேறினார்.

மறுபுறம் நிலைத்து நின்று பவுண்டரிகளை விளாசிய ராகுல் அரை சதம் கடந்து அணிக்கு வலு சேர்த்தார். அவருடன் ஜோடி சேர்ந்த பூரான் அதிரடியை வெளிப்படுத்தினார். 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என 17 பந்துகளில் 33 ரன்களை எடுத்த பூரான் ஷர்துல் தகூர் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தில் விக்கெட்டை இழந்தார். அதற்கு அடுத்த பந்திலேயே கே.எல்.ராகுல் விக்கெட்டை பறிகொடுத்தார். அடிக்க வேண்டிய நேரத்தில் 63 (52) எடுத்திருந்த ராகுல் அவுட் ஆனது பஞ்சாப் அணிக்கு பின்னடைவானது.

அதன்பின்னர் அதிரடியாக அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் இறுதிவரையிலும் அதிரடியை வெளிப்படுத்தாமல் 7 பந்துகளில் 11 ரன்களை மட்டுமே எடுத்தார். அவருடன் ஜோடி சேர்ந்த சர்ஃப்ராஸ் கான் 9 பந்துகளுக்கு 14 ரன்களை அடித்திருந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 174 ரன்கள் குவித்திருந்தது.

பஞ்சாப் அணியின் பேட்டிங்கில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடியிருந்தனர். கேப்டன் ராகுலின் அரை சதம் அணிக்கு கூடுதல் பலம். அடுத்ததடுத்த வீரர்களும் பந்துகளை வீணடிக்காமல் ரன்களை சேர்ந்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் ஆடிய மேக்ஸ்வெல் மற்றும் சர்ஃப்ராஸ் அதிரடியை வெளிப்படுத்த தவறியது சறுக்கலாக அமைந்தது.

சென்னை பவுலிங்கில் ஷர்துல் தகூர் முக்கிய திருப்புமுனையாக அமைந்தார். 17வது ஓவரில் பூரான் மற்றும் ராகுலை அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆக்கியது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அவர்களின் விக்கெட் விழாமல் இருந்திருந்தால் பஞ்சாப் அணி 200 ரன்களை கடந்திருக்கும்.

இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்களான வாட்ஸன் மற்றும் டு பிளசிஸ் ஆகியோர் பஞ்சாப் அணிக்கு தண்ணி காட்டினர். விக்கெட் இப்போது விழும், அப்போது விழும் என காத்திருந்த பஞ்சாப் வீரர்களுக்கு கடைசி வரையிலும் ஏமாற்றமே மிஞ்சியது. இத்தனை போட்டிகளாக ஜொலிக்காத வாட்ஸன் இன்று அத்தனைக்கும் சேர்த்து வைத்து பஞ்சாப் பந்தை வெளுத்துவிட்டார். இருவரது காட்டுத்தனமான அடியை தாங்க முடியாத பஞ்சாப் அணி 17.4 ஓவர்களில் சரண்டர் ஆனது. ஒரு விக்கெட்டை கூட இழக்காத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை பேட்டிங்கில் தொடக்க வீரர்களே அனைத்தையும் செய்து முடித்தனர். வாட்ஸன் மற்றும் டுபிளசிஸ் இருவரும் தாங்கள் எப்பேற்பட்ட ஜாம்பவான்கள் என்பதை நிரூபித்துக்காட்டியிருந்தனர். 53 பந்துகளில் வாட்ஸன் 83 ரன்களை குவித்திருந்தார். இதில் 3 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கும். மறுபுறம் 53 பந்துகளில் டு பிளசிஸ் 87 ரன்களை விளாசியிருந்தார்.

இவரும் சேர்ந்து 106 பந்துகளில் 181 ரன்களை சிதறடித்திருந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த பார்ட்னர்ஷிப் என்ற சாதனையையும் அவர்கள் படைத்தனர். பஞ்சாப் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் யாருமே விக்கெட்டை எடுக்காதது தோல்வியை கொடுத்தது. 3 போட்டிகளில் தோற்ற சென்னை மூன்றுக்கும் சேர்த்து இன்றைய வெற்றியில் ரசிகர்களை குளிர்வித்துவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com