பஞ்சாப் - பெங்களூர் மோதல் : விராட் கோலியின் வியூகம் வெல்லுமா ?
ஐபிஎல் தொடரின் 6வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன. டெல்லி அணியிடம் ஒரு ரன்னில் வெற்றியை தவறவிட்ட பஞ்சாப் அணி, இந்தப் போட்டியை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது. மறுபுறம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வென்ற துடிப்புடன் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தங்கள் வெற்றிப் பயணத்தை தொடரும் உத்வேகத்துடன் இருக்கிறது. இதனால் இந்தப் போட்டியில் ஸ்சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது.
பஞ்சாப் அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் கிரிஸ் ஜோர்தான் விக்கெட்டுகளை எடுக்கதவறியதுடன், 4 ஓவர்களில் 56 ரன்களை வாரிக்கொடுத்திருந்தார். எனவே இந்தப் போட்டியில் அவருக்கு இடம்கிடைக்க வாய்ப்பு குறைவுதான். அவருக்கு பதில் தென்னாப்பிரிக்க வீரர் ஹர்துஸ் வில்ஜியன் அல்லது ஆப்கானிஸ்தான் வீரர் முஜிப் உர் ரஹ்மான் சேர்க்கப்படலாம். அத்துடன் பேட்டிங்கில் நிகோலஸ் பூரான் முற்றிலும் சொதப்பிவிட்டார். இதனால் கிறிஸ் கெயில் அணியில் இடம்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூர் அணி கடந்த போட்டியில் வெற்றி பெற்றதால் அந்த அணியில் பெரிதும் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் முதல் போட்டியில் ஏற்பட்ட அனுபவத்தைக்கொண்டு வியூகம் வகுக்கும் விராட் கோலி சில மாற்றங்களை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, பெங்களூர் அணியில் உமேஷ் யாதவ் ரன்களை வாரி வழங்கியிருந்தார். விக்கெட்டையும் எடுக்கவில்லை. எனவே அவருக்கு பதில் முகமது சிராஜ் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புண்டு. அத்துடன் டேல் ஸ்டின்னுக்கு பதில் இசுரு உதானா சேர்க்கப்படலாம். மேலும், கீப்பராக ஜோஸ் பிலிப்பே சிறப்பாக செயல்படாததால் அவருக்கு பதில் பார்திவ் படேல் இடம்பெறுவார் என எதிர்பார்க்கலாம்.
இந்த இரண்டு அணிகளும் கடந்த 5 முறை மோதிய ஐபிஎல் போட்டிகளில் 4 முறை பெங்களூர் அணியும், ஒருமுறை மட்டுமே பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றிருக்கிறது. போட்டி துபாயில் நடக்கிறது. இதனால் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமையலாம். பஞ்சாப் அணியில் ராகுல், மயங்க் அகர்வால், சர்ஃப்ராஸ் கான் ஆகியோரின் பேட்டிங் பலமாக அமையலாம். பெங்களூர் அணியில் பேட்டிங் வலுவாக இருப்பதால் அதிக ரன்களை குவிக்க வாய்ப்புண்டு. அந்த அணியில் ஃபின்ச், கோலி, டி வில்லியர்ஸ் ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது.
பந்துவீச்சில் முகமது ஷமியும், முஜிப் உர் ரஹ்மானும் பஞ்சாப் அணிக்கு பலமாக அமையலாம். பெங்களூர் அணியில் நவ்தீப் சைனி மற்றும் சஹால் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும். ஆல்ரவுண்டர்களைப் பொறுத்தவரையில் பஞ்சாப் அணியில் மேக்ஸ்வேல் மற்றும் கிருஷ்ணப்ப கவுதம் குறிப்பிடத்தகுந்த வகையில் செயல்படுவார்கள் என எதிர்பார்க்கலாம். பெங்களூரில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் சிவம் துபே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனத்தைக் கொண்டு பார்க்கும்போது பெங்களூர் அணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இருப்பினும் டி20 போட்டிகளில் வெற்றி என்பது இறுதி பந்து வரை கணிக்க முடியாத ஒன்று என்பதால் யார் வெல்லப்போவது என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.