'The Iceman' - மேட்ச்சை வென்றது திவேதியாவின் சிக்சர்கள் அல்ல; அவரின் சமயோஜிதம்
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியை குஜராத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. போட்டி கடைசி பந்து வரைக்குமே விறுவிறுப்பாக சென்றிருந்தது. கடைசி 2 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற சூழலில் ராகுல் திவேதியா இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு அசாத்தியமான முறையில் ஆட்டத்தை வென்று கொடுத்திருந்தார்.
ராகுல் திவேதியாவின் அந்த இரண்டு சிக்சர்களும்தான் ஆட்டத்தை வென்று கொடுத்தது. அது கொண்டாடப்பட வேண்டியதுதான். ஆனால், இங்கே கவனம்பெற வேண்டியது அவரின் சமயோஜித புத்தி. அதுதான் அந்த இரண்டு சிக்சர்களை, குறிப்பாக அந்த வின்னிங் ஷாட்டை அடிப்பதற்கு மூலக்காரணமாக இருந்தது. திவேதியாவின் சமயோஜிதத்தை பற்றி பேசுவதற்கு அந்த கடைசி இரண்டு பந்துகளை மட்டும் கணக்கில் கொள்ள முடியாது. ஒடேன் ஸ்மித் வீசிய அந்த கடைசி ஓவரின் முதல் பந்திலிருந்தே நாம் பேசியாக வேண்டும். மைதானம் அமைப்பையும் கூட இங்கே கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது.
மும்பையின் ப்ரபோர்ன் மைதானத்தில் நேற்று ஆடப்பட்ட அந்த பிட்ச் சரியாக நடுநாயகத்தில் அமைந்ததில்லை. அதன் ஒரு புற பவுண்டரி கொஞ்சம் அதிக தூரமாகவும், இன்னொரு புற பவுண்டரி முன்னதை விட சற்றே குறைவான தூரத்தில் அமைந்தவை. இரண்டு எல்லைகளுக்கும் இடையில் எப்படியும் ஒரு 5-10 மீட்டர் தூர வேறுபாடு இருக்கும். ஒடேன் ஸ்மித் கடைசி ஓவரை வீசியபோது இடது கை பேட்ஸ்மேனுக்கு ஆஃப் சைடில் அந்த பெரிய பவுண்டரி இருந்தது. எனில், லெக் சைடில் கொஞ்சம் தூரம் குறைவான பவுண்டரி இருந்தது.
கடைசி ஓவர் முழுவதையுமே குஜராத் சார்பில் இடதுகை பேட்ஸ்மேன்கள்தான் ஆடியிருந்தனர். முதல் பந்தை டேவிட் மில்லர் எதிர்கொண்டிருந்தார். அந்தப் முதல் பந்தையே ஸ்மித் ஒயிடாக வீசியிருப்பார். காரணம், மில்லரை அதிக தூரமிருக்கக்கூடிய அந்த ஆஃப் சைடில் அடிக்க வைக்க வேண்டும். அதன் மூலம் பவுண்டரி கிடைப்பது கொஞ்சம் சிக்கலாகும் என்பதே திட்டம். இதற்கேற்றவாறே டீப் கவரிலும் ஒரு ஃபீல்டரை நிறுத்தியிருப்பார்.
ஆனால், ஒடேன் ஸ்மித் லாவகமாக அந்த ஒயிடு அவுட் சைடு தி ஆஃப் ஸ்டம்பில் வீச முடியாமல் முதல் பந்திலேயே ஒயிடு வாங்கியிருப்பார். மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தும் அதே ஒயிடு லைன்தான் ஆனால், இந்த முறை ஸ்மித் சரியாக வீச மில்லர் Beaten ஆகியிருப்பார். ஆனால், ஒரு ரன்னுக்கும் முயலவே ஹர்திக் பாண்ட்யா கீப்பர் பேர்ஸ்ட்டோவால் ரன் அவுட் ஆக்கப்பட்டிருப்பார். இப்போதுதான் திவேதியா உள்ளே வந்தார்.
இரண்டாவது பந்தை திவேதியாதான் எதிர்கொள்கிறார். இதுவும் அதே ஒயிடு லைன்தான். ஸ்மித்தின் திட்டப்படியே திவேதியா ஆஃப் சைடில் தட்டி விடுகிறார். டீப் கவர் ஃபீல்டரிடம் பந்து உருண்டு செல்கிறது. ஒரு ரன் மட்டுமே கிடைக்கிறது. திவேதியா நான்-ஸ்ட்ரைக்கர் முனைக்கு சென்றுவிடுகிறார். இப்போது மில்லர் ஸ்ட்ரைக்கில் இருக்கிறார். ஒயிடாக தொடர்ந்து வீசிக்கொண்டே இருந்ததால் இந்த பந்தை மாற்றி ஸ்டம்ப் லைனிலேயே ஸ்லோயர் ஒன்னாக வீசுகிறார். இதை அப்படியே மடக்கி மில்லர் லெக் சைடில் பவுண்டரியாக்கிவிட்டார்.
'நீங்கள் புதிதாக முயன்று பார்க்க நினைப்பதை செயல்படுத்த இது நேரமல்ல' என கமெண்ட்ரி பாக்ஸில் கவாஸ்கர் ஒடேன் ஸ்மித்தின் அந்த பந்து மீது ஆதங்கத்தை வெளிக்காட்டுகிறார். நான்காவது பந்து இப்போது மில்லர் மீண்டும் ஸ்ட்ரைக்கில் இருக்கிறார். ஸ்மித் இப்போது என்ன வீசப்போகிறார்? எனும் எதிர்பார்ப்பு எழுகிறது. கடந்த பவுண்டரி கொடுத்த தாக்கத்தில் இந்த முறை மீண்டும் ஆஃப் சைடு லைனிலேயே வீசுகிறார். மில்லரால் லேசாக தட்டிவிட மட்டுமே முடிந்தது. இந்த பந்தில் ஒரு சிங்கிள் கிடைத்தது. திவேதியா ஸ்ட்ரைக்கிற்கு வருகிறார். கடைசி இரண்டு பந்துகளில் 12 ரன்கள் தேவை.
5 வது பந்தில் ஒடேன் ஸ்மித் மீண்டும் அதே ஒயிட் லைனில் யார்க்கராக வீச முயல்கிறார். ஆனால், இது நல்ல வாட்டமாக ஸ்லாட்டில் விழவே திவேதியா லெக் சைடில் சிக்சராக பறக்கவிட்டார். இப்போது ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. கடைசி ஒரு பந்தில் குஜராத்தின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவை. திவேதியா ஸ்ட்ரைக்கில் இருக்கிறார். ஒடேன் ஸ்மித் என்ன லைனில் வீசப்போகிறார்? ஸ்டம்ப் லைனில் வீசி அடிப்பட்ட அடுத்த பந்திலேயே மீண்டும் ஒயிடு லைனுக்கு வந்திருந்தாரே? அதேமாதிரி திவேதியாவுக்கு ஒயிடு லைனுக்கு முயன்று சிக்சர் வாங்கியிருப்பதால் இந்த பந்தில் வேறு லைனுக்கு மாறுவாரா? இதெல்லாம் மனதில் ஓடி குழப்பிக் கொண்டிருந்தது. ஆனால், களத்தில் நின்ற திவேதியாவுக்கு எந்த குழப்பமும் இல்லை. கடைசி பந்தை வீச ஸ்மித் ரன் அப்பை தொடங்குகிறார். வேகம் கூட்டுகிறார். லைனை நெருங்குகிறார். பந்து ஸ்மித்தின் கையிலிருந்து ரிலீஸாவதற்கு ஒரு மைக்ரோ செகண்ட்டுக்கு முன்பே திவேதியா ஒயிடு லைனை நோக்கி நகர்கிறார். பந்து ரிலீஸ் ஆகிறது. திவேதியா எதிர்பார்த்ததை போன்றே பந்து ஒயிடு லைனில்தான் விழுகிறது. அநாயாசமாக லெக் சைடில் வலுவாக ஒரு அடி அடிக்கிறார். பந்து மேலே பறந்து கொண்டிருந்த போதே வெற்றிக்கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. Yeah it's Sixer!!
திவேதியாவின் அந்த வின்னிங் ஷாட்டை விட ஸ்மித் இந்த லைனில்தான் வீசப்போகிறார் என்பதை உணர்ந்து தூரமான பவுண்டரியை தவிர்க்க, பந்து ரிலீசாவதற்குள்ளேயே க்ரீஸுக்குள் நகர்ந்து லெக் சைடில் சிக்சராக மாற்றினாரே! அந்த சமயோஜிதம்தான் இங்கே ஹைலைட்டான விஷயம்.
குஜராத்தின் வெற்றிக்கு எப்படி இந்த சமயோஜிதம் காரணமோ அதேமாதிரி பஞ்சாபின் தோல்விக்கு இந்த சமயோஜிதம் இல்லாமையே காரணம். இந்த கடைசி ஓவரின் நான்காவது பந்தில் மில்லர் ஒரு சிங்கிள் எடுத்தார் இல்லையா? அந்த பந்தில் ரன்னே வந்திருக்கக்கூடாது. ஏனெனில், மில்லர் பந்தை நேராக ஸ்மித்தின் கைகளுக்குதான் அடித்திருந்தார். திவேதியா க்ரீஸை விட்டு வெளியே நின்றதால் அவரை ரன் அவுட் ஆக்குகிறேன் என ரன் அப்பை முடித்த இடத்திலிருந்து ஸ்மித் டைரக்ட் ஹிட்டுக்கு முயன்றிருப்பார். ஆனால், அது மிஸ்ஸாகவே திவேதியா ரொம்ப சௌகரியமாக ரன் ஓடி ஸ்ட்ரைக்கிற்கு வந்து சம்பவத்தை நிகழ்த்தியிருப்பார்.
ஸ்மித் அந்த சமயத்தில் ரன் அவுட்டுக்கு முயற்சிப்பதற்கான தேவையே எழவில்லை. டைரக்ட் ஹிட்டுக்கு முயற்சிக்கையில் ஸ்டம்புக்கு பின்னால் பந்தை கலெக்ட் செய்யவும் ஃபீல்டர் இல்லை. ரன் அவுட் மிஸ் ஆகி ஓவர் த்ரோவாக லாங் ஆஃப் பீல்டர் வரை சென்று பந்து மீண்டும் வந்தது. அதற்குள் ஒரு ரன் ஓடிவிட்டார்கள்.
இந்த ஒரு ரன் தவிர்க்கப்பட்டிருந்தால் திவேதியா ஸ்ட்ரைக்கிற்கே வந்திருக்கமாட்டார். கடைசி 2 பந்துகளில் 13 ரன்கள் தேவையாக இருந்திருக்கும். எக்ஸ்ட்ராக்கள் கொடுக்காமல் ஒழுங்காக வீசி இரண்டு சிக்சர்களை கொடுத்திருந்தால் கூட ஆட்டம் சூப்பர் ஓவருக்குதான் சென்றிருக்கும். சமயோஜிதம் இன்மையால் பஞ்சாப் அணி ஆட்டத்தை கோட்டைவிட்டது.
'திவேதியாவை இனி Ice man என்றுதான் அழைப்பேன். எவ்வளவு கூலாக ஆட்டத்தை முடிக்கிறார்?. அற்புதம்' என கவாஸ்கர் பாராட்டியிருந்தார். ஆம், அவர் Ice man தான். சமயோஜிதமுடைய Iceman!
-உ.ஸ்ரீராம்
இதையும் படிக்கலாம்: 2 பந்துகளில் 12 ரன் தேவை: அதிரடி காட்டிய திவாட்டியா- குஜராத் த்ரில் வெற்றி