புஜாராவின் போராட்டம் வீண்.. நாதன் லயன் சுழலில் சுருண்ட இந்தியா! ஆஸி.க்கு 76 ரன்கள் இலக்கு!

புஜாராவின் போராட்டம் வீண்.. நாதன் லயன் சுழலில் சுருண்ட இந்தியா! ஆஸி.க்கு 76 ரன்கள் இலக்கு!
புஜாராவின் போராட்டம் வீண்.. நாதன் லயன் சுழலில் சுருண்ட இந்தியா! ஆஸி.க்கு 76 ரன்கள் இலக்கு!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற 76 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியானது, மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஹால்கர் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என வெற்றி பெற்று இந்தியா முன்னிலையில் இருந்து வரும் நிலையில், அடுத்த 2 போட்டிகளில் மீண்டு வந்து தொடரை சமன் வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா களம் கண்டு விளையாடி வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் மேத்யூ குஹ்னெமன், நாதன் லயன் இருவரின் சிறப்பான பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல், 109 ரன்களுக்கு ஆல் அவுட்டனது. பின்னர் தங்களுடைய முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜடேஜா தொந்தரவு தந்தாலும், சிறப்பாக பார்ட்னர்ஷிப் போட்ட கவாஜா மற்றும் லபுசனே இருவரும், ஆஸ்திரேலிய அணியை முதல் இன்னிங்ஸ் முடிவில் 197 ரன்கள் சேர்க்க பக்கபலமாக செயல்பட்டனர். சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

டாப் ஆர்டர்கள் சொதப்பினாலும் நிலைத்து நின்று விளையாடிய புஜாரா!

இந்நிலையில் 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டு வந்து நல்ல ரன்களை அட்டவணையில் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு பெரிய தடையாக வந்து நின்றார், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன். அபாரமாக பந்துவீசிய நாதன் லயனின் சுழலை சமாளிக்க முடியாத, இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று விளையாடிய புஜாரா, இந்திய அணியை நல்ல டொட்டலுக்கு எடுத்துவரும் முயற்சியில் சிறப்பாக செயல்பட்டார்.

புஜாரா-ஸ்ரேயாஸ் கூட்டணியை பிரித்த கேப்டன் ஸ்மித்!

78 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்த நிலையில், புஜாராவுடன் கைக்கோர்த்த ஸ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை கொண்டுவந்தார். இந்நிலையில் அப்போதைய சூழலை சிறப்பாக கையாண்ட ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்கை தாக்குதலுக்கு எடுத்துவந்தார். அப்போது கேப்டனின் நம்பிக்கையை பூர்த்தி செய்ய நினைத்த ஸ்டார்க், ஸ்ரேயாஸ் ஐயரை 26 ரன்களுக்கு வெளியேற்றினார்.

அரைசதம் அடித்து அசத்திய புஜாரா!

பிறகு என்னதான் புஜாரா போராடினாலும், மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடாத மிடில் ஆர்டர் பேட்டர்கள், எளிதாக விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்து வெளியேறினர். இறுதிவரை போராடிய புஜாரா அரைசதம் அடித்து அசத்திய நிலையில், 59 ரன்களுக்கு நாதன் லயன் சுழலில் சிக்கி வெளியேறினார். அதற்கு பிறகு இந்தியாவின் இன்னிங்ஸை முடித்து வைக்க நினைத்த ஆஸ்திரேலியா, 163 ரன்களுக்கு இந்தியாவை ஆல்அவுட் ஆக்கியாது. இரண்டாவது இன்னிங்ஸின் முடிவில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி பெற 76 ரன்கள் மட்டுமே இலக்காக அமைந்துள்ளது.

2 முறை ஒரே இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்திய லயன்!

சுழற்பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் நாதன் லயன், இந்திய அணிக்கு எதிராக இரண்டாவது முறையாக ஒரே இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். 2 முறை இதை இந்திய அணிக்கு எதிராக செய்த, ஒரே பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார் லயன். இதற்கு முன்னர் 2016-2017 சுற்றுப்பயணத்தின் போது, 50 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது 64 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com