சிட்னி டெஸ்ட்: முதல் நாளில் இந்திய அணி 303 ரன் குவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி மயங்க் அகர்வாலும் ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கே.எல். ராகுல் 9 ரன் எடுத்த நிலையில் ஹசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மயங்க் அகர்வாலுடன் புஜாரா இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடி வந்தனர். அபாரமாக ஆடி அரைசதம் அடித்த மயங்க், 77 ரன் எடுத்தபோது, லியான் பந்துவீச்சில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து விராத் கோலி வந்தார். அவரும் நிலைத்து நின்று ஆடவில்லை. அவர் 23 ரன் எடுத்திருந்தபோது, ஹசல்வுட் பந்துவீச்சில் விக்கெட் கீப் பர் பெய்னிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர், துணை கேப்டன் ரஹானே வந்தார். அவரும் புஜாராவும் நிதானமான ஆட்ட த்தை கடைபிடித்தனர்.
ஆனால், 18 ரன் எடுத்திருந்த ரஹானே, ஸ்டார்க் பந்துவீச்சில் பெய்னிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அடுத்து விஹாரி வந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நின்று நிதானமாக ஆடிய புஜாரா, அபார சதமடித்தார். இது அவரது 18 வது சதம். இந்த தொடரில் இது அவருக்கு 3 வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு, 303 ரன் எடுத்துள்ளது. புஜாரா 130 ரன்னுடன் விஹாரி 39 ரன்னுடனும் ஆடி வருகின்றனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், லியான் தலா ஒரு விக்கெட்டும் ஹசல்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். இரண்டாவது நாள் ஆட்டம் நாளை தொடங்குகிறது.