“நான் விளையாடியதில் மிகவும் சவாலான ஆட்டம் இதுதான்” - இரட்டைச் சதம் குறித்து ரோகித்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்தது மிகவும் சவாலாக இருந்தது என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி, டெஸ்ட்டில் முதல் முறையாக தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இவர் 212 ரன்கள் சேர்த்தார். அதேபோல அசத்தலாக விளையாடிய ரஹானே 115 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இந்நிலையில் தனது இரட்டை சதம் குறித்து ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தொடக்க ஆட்டக்காரராக மட்டும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அனைத்து இடங்களிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று தான் நினைப்பேன். தற்போது நான் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியுள்ளேன். இன்னும் நிறையே போட்டிகள் விளையாட வேண்டும். அதனால் என்னுடைய தொடக்க ஆட்டம் குறித்து தற்போது எதுவும் பெரிதாக கூற முடியாது.
எனினும் 5-ஆவது அல்லது 6-ஆவது இடத்தில் விளையாடுவதைவிட தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது சவாலாக உள்ளது. ஏனென்றால் 30,40-ஆவது ஓவர்களில் களமிறங்குவது சற்று எளிது. ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்தில் பந்து ஸ்விங் ஆகும் போது விளையாடுவது மிகவும் கடினம். அந்தச் சமயத்தில் எந்தப் பந்தை விடுவது எந்தப் பந்தை அடிப்பது என்று கணிப்பது சற்று சவாலாக இருக்கும். இந்தப் போட்டியில் எனக்கு அப்படி ஒரு சவாலான நிலைதான் இருந்தது. இதனால் தான் தொடக்கத்தில் சற்று பொறுமையாக விளையாட ஆரம்பித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.