புரோ கபடி லீக்: வென்றது தமிழ் தலைவாஸ்... அசத்திய அஜய் தாக்கூர்!
புரோ கபடி லீக் தொடரில் குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி போராடி வெற்றி பெற்றுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற போட்டியின் முதல் பாதியில் குஜராத் அணி 7 புள்ளிகள் முன்னிலையில் இருந்தது. ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தமிழ் தலைவாஸ் அணி புள்ளிகள் சேர்த்தது. கடைசி 17 நொடிகளில் குஜராத் அணி ஒரு புள்ளி முன்னிலையில் இருந்தது. அந்த நேரத்தில் குஜராத் அணியின் களத்திற்குள் புகுந்து துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக அணி கேப்டன் அஜய் தாக்கூர் 2 புள்ளிகள் சேர்த்தார். இதனால் 35-34 என ஒரு புள்ளி வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றியை வசப்படுத்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜய் தாக்கூர் 14 புள்ளிகள் சேர்த்தார். இந்த போட்டியில் தமிழக அணி நான்காவது வெற்றியை ஈட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.