அக்ஷய், சச்சின், சிரஞ்சீவி முன்னிலையில் புரோ கபடி!
புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்குகிறது. இந்தி நடிகர் அக்ஷய்குமார், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தெலுங்கு ஹீரோ சிரஞ்சீவி, மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் உட்பட பலர் தொடக்கவிழாவில் கலந்துகொள்கின்றனர்.
5-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் இன்று இரவு தொடங்குகிறது. அக்டோபர் 28-ம் தேதி வரை 3 மாதம் இந்த கபடி திருவிழா அரங்கேறுகிறது. போட்டியில் பங்கேற்கும் 12 அணிகள், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 3 முறை மோத வேண்டும். அத்துடன் அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணியும் 21 லீக் ஆட்டத்தில் விளையாட வேண்டும். அக்டோபர் 20-ம் தேதியுடன் லீக் சுற்று முடிவுக்கு வருகிறது.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். ‘பிளே-ஆப்’ சுற்றில் 3 தகுதி சுற்று, 2 வெளியேற்றுதல் சுற்று ஆட்டங்கள் உண்டு. இதன் முடிவில் 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி சென்னையில் நடக்கிறது.
புரோ கபடி லீக் போட்டியின் தொடக்க விழா ஐதராபாத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. விழாவில் நடிகர் அக்ஷய்குமார், சச்சின் தெண்டுல்கர், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலிராஜ், நடிகர் சிரஞ்சீவி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
பின்னர் நடக்கும் முதலாவது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணியும், 2-வது ஆட்டத்தில் யு மும்பை-புனேரி பால்டன் அணியும் மோதுகின்றனர்.