பிருத்வி ஷா அதிரடி சதம்: இந்திய ஏ அணி அபாரம்!
இங்கிலாந்தில் நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய ஏ அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா அபார சதமடித்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய ஏ கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து முத்தரப்பு தொடரில் பங்கேற்றது. இந்திய ஏ, வெஸ்ட் இண்டீஸ் ஏ, இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய ஏ அணி, கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து இந்திய ஏ அணிக்கு பாராட்டுகள் குவிந்தது. இதன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் பாராட்டு கள் கிடைத்தன.
இந்நிலையில் இந்திய ஏ அணி, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி பங்கேற்கும் அங்கீகாரமில்லாத டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் பெக்கன்ஹம் நகரில் நடந்து வருகிறது. முதலில் விளையாடிய இந்திய ஏ அணி 42.1 ஓவர்களில் 133 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டையும் இழந்து சுருண்டது. இந்திய ஏ தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்கள் பிருத்விஷா, மயங்க் அகர்வால், ஜெயந்த யாதவ், அங்கித் ராஜ்புத் ஆகிய 4 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். அதிகப்பட்சமாக விஹாரி 37 ரன்களும் விஜய் சங்கர் 34 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி தரப்பில் ஷெர்மான் லெவிஸ், செமர் ஹோல்டர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி, 383 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சுனில் அம்பரிஸ் 128 ரன்களும் சும்ரா புரூக்ஸ் 91 ரன்களும் எடுத்தனர். இந்திய ஏ தரப்பில் அங்கித் ராஜ்புத் 4 விக்கெட்டுகளும் நவ்தீப் சைனி, நதீம் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய ஏ அணி, இரண்டாம் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 159 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா 74 பந்துகளில் சதம் அடித்தார். இதில் ஒரு சிக்சரும் 18 பவுண்டரிகளும் அடங்கும். அவர் 101 ரன்களுடனும் மயங்க் அகர்வால் 56 ரன்களுடன் களத்தில் உள்ளனர். பத்து விக்கெட் கையில் உள்ள நிலையில் இந்திய ஏ அணி, 91 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது. மூன்றாம் நாள் ஆட்டம் ஆட்டம் இன்று நடக்கிறது.