வெற்றி பறிபோனது எப்படி? ஷிகர் தவான் விளக்கம்!
முதல் ஆறு ஒவர்களிலேயே இலங்கை அணி வெற்றியை எங்களிடம் இருந்து பறித்துவிட்டது என்று இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஷிகர் தவான் கூறினார்.
இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி, இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் நடக்கிறது. முதல் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் நேற்று மோதின.
முதலில் பேட் செய்த இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு, 174 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா ரன் கணக்கை தொடங்காமலும் சுரேஷ் ரெய்னா ஒரு ரன்னிலும் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தாலும் ஷிகர் தவான் அதிரடியாக ஆடி 49 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார். மணீஷ் பாண்டே 37, ரிஷப் பன்ட் 23, தினேஷ் கார்த்திக் 6 பந்தில் 13 ரன்கள் எடுத்தனர்.
175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 18.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக குஷல் பெரேரா 66 ரன்களும், திசாரா பெரேரா 22 ரன்களும் எடுத்தனர்.
போட்டிக்குப் பின் பேசிய இந்திய அணியின் துணை கேப்டன் ஷிகர் தவான், ’நாங்கள் பேட்டிங் செய்த போது முதல் இரண்டு ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார்கள். அதுதான் எங்களை டேமேஜ் ஆக்கிவிட்டது. வழக்கமாக நான் ஆக்ரோஷமாக ஆடுவேன். பொதுவாக என் ஸ்டிரைக்ரேட் அதிகமாகத்தான் இருக்கும். விக்கெட்டுகள் விழாமல் இருந்திருந்தால் இன்னும் ஆக்ரோஷமாக ஆடியிருப்பேன். ஆனால் இரண்டு விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே இழந்த பிறகு விக்கெட்டை தக்க வைக்கவேண்டும் என்பதற்காக கொஞ்சம் வேகம் குறைந்துவிட்டது. கடைசி ஆறு ஓவரில் இன்னும் அதிகமாக ரன்கள் குவித்திருக்க வேண்டும். 10 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். இலங்கை தரப்பில் முதல் ஆறு ஓவரிலேயே அவர்கள் போட்டியை எங்களிடம் இருந்து பறித்துவிட்டார்கள். அதற்கு பிறகு அவர்கள் அதிரடியாக ஆடவில்லை. ஆடுகளத்தின் தன்மையும் மாறிவிட்டது’ என்றார்.