ஓய்வுக்கு பின்பு இதைத்தான் செய்யப்போகிறாரா தோனி ?
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அடுத்து இயற்கை முறையில் உரம் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பல சாதனைகளை புரிந்த தோனி கடந்த சனிக்கிழமை இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வை அறிவித்தார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தான் ஓய்வுப்பெற்றாலும் ஐபிஎல் தொடர்களில் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடுவார் எனக் கூறப்படுகிறது.
பொதுவாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெறும் வீரர்கள் வர்ணனையாளர்களாகவும், பயிற்சியாளர்களாகவும் விரும்புவார்கள். ஆனால் எப்போதும் எதிலும் வித்தியாசத்தை முயற்சிக்கும் தோனி அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இது குறித்து "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளிதழுக்கு பதிலளித்துள்ள தோனியின் நண்பரும் ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான மிஹிர் திவாகர் "தோனி மிகப்பெரிய விஷயங்களை செய்ய காத்திருக்கிறார். அவருடன் நானும் ஐபிஎல் போட்டிகளுக்கு அமீரகத்தில் இருப்பேன்" என்றார்.
மேலும் பேசிய திவாகர் "அவர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து தோனியிடம் விரிவாக பேச வேண்டியது இருக்கிறது. அவருக்கு இயற்கை விவசாயத்தில் ஆசை இருக்கிறது. இயற்கை உரங்களை ஏற்கெனவே தன்னுடைய பண்ணை வீட்டில் அவர் சோதனை செய்திருக்கிறார். இதற்காக நியூ குளோபல் நிறுவனத்திடம் பேசியுள்ளார். அவர்கள் தயாரித்த உர்ததைதான் பண்ணை வீட்டில் பயன்படுத்தினார். அது அவருக்கு மிகவும் பிடித்துப்போனது" என்றார்.
தொடர்ந்த திவாகர் "எனவே நியூ குளோபல் நிறுவனத்தின் பெருமளவிலான பங்கை தோனி வாங்க முடிவு செய்துள்ளார். ஐபிஎல் முடிந்ததும் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். இயற்கை உரங்கள் தொடர்பான வணிகத்தை அவர் செய்வார்" என கூறியுள்ளார்.