கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்குகிறது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்!

கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்குகிறது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்!
கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்குகிறது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்!

சென்னை அருகே மாமல்லபுரத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் செஸ் ஒலிம்பியாட் இன்று தொடங்க உள்ளது. பிரதமர் மோடி தொடங்கிவைக்க உள்ள இந்தப் போட்டியில், 187 நாடுகளில் இருந்து 2,100 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

மதிநுட்ப விளையாட்டான சதுரங்கத்தில் சர்வதேச அளவில் வல்லவர்கள் யார் என்பதை தீர்மானிக்கும் செஸ் ஒலிம்பியாட் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சுடர் ஓட்டத்தை கடந்த மாதம் 19 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார்.

75 நகரங்களுக்கு பயணித்த செஸ் ஒலிம்பியாட் சுடர் மாமல்லபுரம் வந்தடைந்தது. விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதனிடம் வழங்கப்பட்ட இந்தச் சுடர், சென்னை - நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெறும் தொடக்க விழாவில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் 22 ஆயிரம் சதுர அடியில் ஓர் அரங்கமும், 52 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான மற்றோர் அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நடைபெறும் போட்டியில், 187 நாடுகளைச் சேர்ந்த 350 அணிகள் பங்கேற்கின்றன. ஆடவர் பிரிவில் 188 அணிகளும் மகளிர் பிரிவில் 162 அணிகளும் விளையாட உள்ளனர். இந்தியா சார்பில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தலா 3 அணிகள் களமிறங்குகின்றனர். தொடக்க விழாவில், தமிழர்களின் பாரம்பரிய கலைகள் உள்ளிட்ட கண்கவர் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, பூஞ்சேரி மட்டுமின்றி, சென்னை முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளது. சென்னை முதல் பூஞ்சேரி வரை கருப்பு வெள்ளை சதுரங்கப் பலகைகளும், 'தம்பி' குதிரை சின்னமும் கண்கவர் ஓவியங்களாக அலங்கரிக்கின்றன. தொடக்க விழாவிற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை விமானம் மூலம் சென்னை வருகிறார். பிரதமருக்கு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போட்டி நடைபெறும் பூஞ்சேரி தனியார் விடுதியில் காவல்துறையினர் மூவாயிரம் பேரும் சென்னையில் 22 ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com