ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் களமிறங்கிய இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
நியூசிலாந்தின் மவுண்ட் மங்குனுய் நகரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 216 ரன்களில் ஆட்டமிழந்தது. 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் பிரித்வி ஷா, மன்ஜோத் கல்ரா ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு அவர்கள் 71 ரன்கள் சேர்த்தனர். பிரித்வி ஷா 29 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய ஷுப்மான் கில்லும் நேர்த்தியாக ரன் சேகரித்தார். ஷுப்மான் கில் 31 ரன்களில் வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மன்ஜோத் கல்ரா சதமடித்து அசத்தினார். இந்திய அணி 39-ஆவது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது.
ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் “ இளம் வீரர்களின் மகத்தான வெற்றியை கண்டு வியப்படைந்தேன். ஜூனியர் உலகக்கோப்பையில் பட்டம் வென்ற அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துகள். இளம் வீரர்களின் இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியனையும் பெருமையடைய வைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.