“இவருக்கு பதில் தோனியை களமிறக்குங்கள்”- சுனில் கவாஸ்கர் கருத்து..!
ஐந்தாவது ஒருநாள் போட்டியில் தோனி விளையாட தகுதி பெற்றால், தினேஷ் கார்த்திக்கு பதிலாக தோனியை களமிறக்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. தற்போது 4 ஒருநாள் போட்டிகள் முடிவடைந்துள்ளன. அவற்றில் முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை வென்றது. அதேசமயம், 4-வது ஒருநாள் போட்டியில் இந்தியா பரிதாப தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இந்தியாவின் நடுகள ஆட்டக்காரர்களான ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை என்று புகார் எழுந்தது.
முன்னதாக நான்காவது ஒருநாள் போட்டியில் விராத் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. அதேபோல, காயம் காரணமாக அனுபவ வீரர் தோனியும் விளையாடவில்லை. இவர்களை போன்ற அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில் இந்தியா அப்போட்டியில் மிகவும் மோசமான தோல்வியை அடைந்திருந்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான சுனில் கவாஸ்கர் “ ஐந்தாவது ஒருநாள் போட்டிக்கு முன் தோனி விளையாட தகுதியாக இருந்தால், அவர் தினேஷ் கார்த்திக்கு பதிலாக விளையாட வேண்டும். ஏனென்றால், தோனி மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். தொடக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்தால் கூட, நடுகள வரிசையில் வந்து நிதானமாக நிலைத்து ஆடக்கூடிய தகுதி உடையவர். அதேபோல, ஆட்டத்தின் நிலைக்கேற்ப தனது ஆட்டத்தை வெளிபடுத்தக் கூடியவர். இதனால் அவர் ஐந்தாவது போட்டியில் விளையாடினால் இந்தியாவிற்கு நல்ல பயனளிக்கும்.
மேலும் அறிமுக போட்டியில் 9 ரன்கள் எடுத்த சுபமன் கில் ஐந்தாவது போட்டியில் விளையாடவேண்டும். அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கவேண்டும்” என்றார். இந்தியா நியூசிலாந்து மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வெலிங்டனில் நாளை நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது.