`யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா’வா இது? வைரலாகும் அமெரிக்க மகளிர் அணி புகைப்படம்! ஏன்?
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக அமெரிக்க அணியில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகள் அனைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடருக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 5 அணிகளில் 4 அணிகள் தகுதிச் சுற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும். ஐந்தாவது அணியான அமெரிக்காவிற்கு நேரடியாக நுழையும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அடுத்துவரும் ஐசிசியின் டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்காவில் வைத்து நடத்தப்பட உள்ளதால் அந்த அணிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கவிருக்கும் அமெரிக்க அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அப்படி வெளியான இந்த அமெரிக்க அணியின் வீராங்கனைகள் பட்டியல் இந்திய ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. காரணம் அமெரிக்க அணியில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகள் அனைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதுதான்.
இதனை ட்விட்டரில் பகிர்ந்து பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். 'இது யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காவா அல்லது யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியாவா...' என நெட்டிசன் ஒருவர் சுவராஸ்யமாக ட்விட் செய்துள்ளார்.
மற்றொரு நெட்டிசன், 'இது இரண்டாவது இந்திய அணி என்று நினைக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.